Last Updated : 28 Jul, 2017 08:54 AM

 

Published : 28 Jul 2017 08:54 AM
Last Updated : 28 Jul 2017 08:54 AM

‘நீட்’ தேர்வுக்கு எதிராக அவசர சட்டம் இயற்ற அரசு ஒப்புதல்?

ஜல்லிக்கட்டுக்கு செய்தது போல், ‘நீட்’ தேர்வு தொடர்பாகவும் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்ற மத்திய அரசு சம்மதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்காலிக ஏற்பாடான இதன் செயலாக்க நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட தாகவும் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவால் ஜல்லிகட்டு நடத்த தடை உருவானபோது தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இதனால் தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வான ‘நீட்’ காரணமாக மாநில பாடத்திட்டத்தில் பயின்ற தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அத்தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவானது. ஆனால் இதையும் மீறி நடந்த தேர்வில் தமிழக மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அளித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு கவனத்துடன் பரிசீலித்தது. இதன் விளைவாக நடப்புக் கல்வியாண்டு அல்லது ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று முன்தினம் டெல்லி வந்த தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் மத்திய அரசு சார்பில் சில ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதன்படி ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றியதுபோல், ‘நீட்’ தேர்வு தொடர்பாகவும் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு சட்டம், சுகாதாரம், மனிதவள மேம்பாடு ஆகிய அமைச்சகங்கள் அனுமதி அளிக்க மறுத்து விட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவை இவை சுட்டிக் காட்டியுள்ளன. இதை சமாளிக்க, அவசரச் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரால் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன. தமிழக அரசின் அவசரச் சட்டம் ஓரிரு நாட்களில் உள்துறை அமைச்சகம் வரும். இதை நாங்கள் மூன்று அமைச்சகங்களுக்கு அனுப்பி அவற்றின் அனுமதியை பெறவும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது” என்று தெரிவித்தனர்.

தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தாலும் அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம். இதன் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகம், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியை செய்யும். எனினும், இது நிரந்தரச் சட்டம் இல்லை என்பதால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவையில்லை எனக் கருதப்படுகிறது.

நடப்புக் கல்வியாண்டு அல்லது ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x