Last Updated : 26 Jul, 2017 08:23 AM

 

Published : 26 Jul 2017 08:23 AM
Last Updated : 26 Jul 2017 08:23 AM

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் (71) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் பிஹார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் முடிவு கடந்த 20-ம் தேதி வெளியானது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராக தேர்வானார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவராக இருந்து வந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜியும், ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் அணி வகுத்து மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்ற வாயிலில் இருவரையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பாரம்பரிய மரியாதை களுடன் ராம்நாத் கோவிந்த் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பதிவேட்டில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார்.

தலைவர்கள் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில், குடியரசு முன்னாள் தலைவர் பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் மக்களவை முன்னாள் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்டவருமான மீரா குமார், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

குறிப்பிடத்தக்க மைல்கல்

குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக பாஜக எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘சியாம பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்ட பயணத்தில் லட்சக்கணக்கானோர் தியாகங்களை செய்துள்ளனர். புதிய குடியரசுத் தலைவரின் பதவியேற்பு அந்த பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்’’ என்றார். இதை கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

எல்லோருக்கும் வாய்ப்பு

குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்ட பிறகு ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

நமது நாட்டில் பல்வேறு மாநிலங்கள், பிரதேசங்கள், மொழிகள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் உள்ளன. நம்மிடம் வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமையும் பன்முகத்தன்மையுமே நமது வெற்றிக்கான திறவுகோலாக உள்ளன.

எல்லா மக்களுக்கும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கடைசி நபருக்கும் கடைசி பெண்ணுக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

75-வது சுதந்திர தினம்

2022-ம் ஆண்டில் நமது 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. நாம் நிறைய சாதனைகள் செய்துள்ளோம். ஆனால், மேலும் அதிகமாகவும் சிறப்பாகவும் வேக மாகவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

விரைவான, உயர்ந்த பொருளா தார வளர்ச்சி, கல்வியறிவுடன் சமத்துவமான சமுதாயம் நாட்டுக்கு தேவைப்படுகிறது. அதைத்தான் மகாத்மா காந்தியும் தீனதயாள் உபாத்யாயாவும் கனவு கண்டார்கள். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x