Last Updated : 10 Nov, 2014 11:06 AM

 

Published : 10 Nov 2014 11:06 AM
Last Updated : 10 Nov 2014 11:06 AM

2ஜி வழக்கில் இறுதி வாதம் டிச.19-க்கு ஒத்திவைப்பு: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

2 ஜி வழக்கின் இறுதி வாதத்தை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவணங்களைப் படித்து பார்க்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதையடுத்து இறுதி வாதம் தொடங்கும் நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2 ஜி வழக்கின் இறுதி வாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. இன்று நீதிமன்றம் கூடியதும், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ஆவணங்களை படித்துப் பார்க்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கில் இறுதி வாதத்தை டிச.19-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இவ்வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் தொலைதொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் அப்போதைய தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா உட்பட 14 பேர் மற்றும் மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நடைபெற்று வருகிறது. அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, அரசியல் தரகர் நீரா ராடியா உட்பட 153 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் 4,400 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று தொடங்கவதாக இருந்த இவ்வழக்கின் இறுதி வாதம் டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதி வாதத்தின்போது ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு, அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு உள்ளிட்டவையும் விசாரணைக்கு வரவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x