Last Updated : 19 Jul, 2017 12:54 PM

 

Published : 19 Jul 2017 12:54 PM
Last Updated : 19 Jul 2017 12:54 PM

பசு பாதுகாவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி: விஎச்பி அறிவிப்பால் சர்ச்சை

நாடு முழுவதும் பசு பாதுகாவலர் களுக்கு விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) பயிற்சி அளிக்கும் என அதன் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல தவறான நிகழ்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பசு பாதுகாவலர்களின் தாக்குதலுக்கு பெரும்பாலும் தலித் மற்றும் சிறுபான்மையினர் இலக்காவதும் இதில் சிலர் உயிரிழப்பதும் நிகழ்ந்து வருகிறது. பசு பாதுகாவலர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் போக்கு, உ.பி. தேர்தலில் பாஜக வென்ற பிறகு அதிவேகம் எடுத்துள்ளது. உ.பி.யில் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது.

இதையடுத்து பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதையும், சட் டங்கள் மீறப்படுவதையும் அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி அறிவித்தார். சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தற்போது விடுத்துள்ளார். இந்நிலையில் பிரதமரின் எச்சரிக்கைக்கு மறுநாள், சர்ச்சைக்குரிய அறிவிப்பை விஎச்பி செயல்தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்டுள்ளார்.

தொகாடியா தனது அறிவிப்பில், “நாடு முழுவதும் பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க பசு பாதுகாவலர்களுக்கு உகந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்காக புனிதப் போராளிகள் படை அமைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படும். எங்கள் புனித விலங்கான பசுவை பலிகொடுக்க எக்காரணம் கொண்டும் யாரையும் அனுமதிக்க முடியாது. இதனால் எழும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் விஎச்பி.யினர் அப்பணியை செய்வார்கள். இந்த பசு பாதுகாப்பு இயக்கத்ததை நாம் விரைவில் தீவிரப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

தொகாடியா கடந்த 3 தினங்க ளாக, மேற்கு உ.பி.யில் உள்ள அலிகர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அலிகர் மாவட்டத்தில் உள்ள 1350 கிராமங் களில், 600 புனிதப் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அமர்த்தப் படுவார்கள் என தொகாடியா அறிவித்துள்ளார். மதக்கலவரத் துக்கு பெயர்பெற்ற இந்தப் பகுதிகளில் தொகாடியாவின் பேச்சு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x