Last Updated : 28 Jul, 2017 04:45 PM

 

Published : 28 Jul 2017 04:45 PM
Last Updated : 28 Jul 2017 04:45 PM

நாட்டின் மருத்துவத் துறைக்குத் தேவைப்படுகிறது பெரிய அறுவை சிகிச்சை

அதிக செலவாகும், ‘தரமான’ மருத்துவம் என்று நம்பக்கூடிய தனியார் மருத்துவம் நம் நாட்டில் சமீபத்தில் இரண்டு பேரடிகளை வாங்கியது.

மேற்கு வங்க மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் என்ற ஒன்று அம்மாநிலத்தில் அமைக்கப்பட்டது, காரணம், தனியார் மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை மற்றும் அதிக பணம் வசூலிப்பது ஆகியவற்றை எதிர்த்து மக்கள் போராட்டம், எதிர்ப்பு அங்கு வலுத்தது. கொல்கத்தா மருத்துவமனையில் 4 மாதக்குழந்தை ஒன்று

இறந்ததையடுத்து ‘முறைதவறிய நிர்வாகம்’ மற்றும் தவறான சிகிச்சை காரணமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது மேற்கு வங்க மருத்துவக் கட்டுப்பாட்டு ஆணையம்.

மிகச்சமீபமாக மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்துக்கு அனுப்பிய அதிர்ச்சிகரமான அறிக்கையில் பல முன்னணி மருத்துவமனைகள் மருத்துவ உபகரணங்களுக்கு மேலதிகமான விலையை நிர்ணயம் செய்ததை அதில் புகார் அளித்திருந்தது.

இருதய அறுவைசிகிச்சையில் ஸ்டெண்ட் வைப்பதற்கு கட்டுப்பாட்டு ஆணையம் வைத்துள்ள விலை வரம்பை முறியடிக்கும் விதமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில் பலூன் மற்றும் கதீட்டர்களுக்கு அதிக விலை தீட்டியுள்ளது. உபகரண விநியோகஸ்தர்களின் லாபத்தையும் சேர்த்துப் பார்த்தால் இந்த உபகரணங்களின் இறக்குமதி விலையை விட நோயாளிகள் 5 மடங்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே இந்த உபரகரணங்களுக்கு உற்பத்தி செலவு மற்றும் உற்பத்தியாளர் லாபம் ஆகியவையும் அடங்குகிறது.

தாமதமான நீதி

தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் தங்கள் தகுதியை மீறியும் செலவு செய்து வரும் நிலையில் திறமையின்மைக்கும், தவறான சிகிச்சைக்கும் நோயாளிகள் இலக்காவதிலிருந்து தப்பிப்பது எப்படி? சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக உலகச் சுகாதார மைய பிரதிநிதி இந்தியா வந்திருந்த போது ‘5 நட்சத்திர’ மருத்துவமனைகள் என்று கருதப்படும் தனியார் மருத்துவத்துறைகளை கட்டுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் கூட இத்தகைய கட்டுப்பாட்டு ஆணையம் வருவதற்கு தனியார் மருத்துவமனைகள் அதனை முற்று முழுதாக எதிர்த்தனர், அதனால் கட்டுப்பாட்டு ஆணையம் அமலாக தாமதமானது. தாமதமாக வந்தாலும் அது எவ்வளவு திறம்பட இத்தகைய முறைகேடுகளை ஒழிக்க முடியும் என்பதில் ஐயமே நிலவுகிறது. காரணம் இந்தியாவின் ஆட்சியதிகாரத்தின் நிலையே. அப்படியே நீதி வந்தாலும் அது பெரிய அளவில் தாமதமாகவே வருகிறது. இதற்குக் காரணம் நுகர்வோர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் தகவலுரிமை குழுக்களின் எண்ணிக்கை குறைவுமே.

அடிப்படையான விஷயம் என்னவெனில் அரசு சார்ந்த மருத்துவ உதவிகள், குறைந்த செலவில் ஓரளவுக்கு நல்ல சிகிச்சையை அரசு அளிக்க முடியாத நிலை உள்ள போது தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. இதனால் அதிக செலவைச் செய்ய வேண்டியுள்ளதோடு நிறைவான சேவையும் கிடைப்பதில்லை.

அரசு மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் போதுமான அளவுக்கும், ஓரளவுக்கு நல்ல தரமும் இருக்கும் இடங்களில் ஒப்பிடுகையில் தனியார் மருத்துவமனைகள் குறைந்த கட்டணங்களை வசூலிப்பதையும் பார்க்க முடிகிறது. கேரளாவில் உதாரணமாக இவ்வாறு உள்ளதோடு, அங்கு பல்வேறு மதக்குழுக்கள் லாப நோக்கற்ற தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருகிறது.

பொதுச்சுகாதாரச் சேவை நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமெனில் அதற்கான அரசின் நிதிஒதுக்கீடு பலமடங்கு அதிகரிக்க வேண்டியுள்ளது. 206-17-ல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு உலக அளவில் சராசரியாக 5.99% எனும்போது இந்தியாவில் 1.4% நிதி ஒதுக்கீடுதான் செய்யப்படுகிறது. இந்தியர்கள் மருத்துவத்துக்காகச் செலவு செய்யும் தொகையில் 80% தங்கள் சொந்தப் பணத்திலிருந்தே செலவிடுகின்றனர்.

இது அடிக்கடி கூறப்படுவதுதான், ஆனால் இதற்கான வரிவருவாய் ஆதாரங்களைத் திரட்டுவது கடினம். ஆனால் இதுதான் சிறந்த வழி. மேலும், பொதுச்சுகாதார நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்துவது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதைச் சீர்செய்யும்பட்சத்தில்தான் அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மக்களைச் சென்றடைய வழிபிறக்கும்.

ஆரம்ப சுகாதாரத் திட்டம்

பொதுச்சுகாதாரம், ஆரம்பச் சுகாதாரம் ஆகியவற்றில் நிர்வாக மட்டத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, “மாநில அரசுகள் மருத்துவக் கொள்கையை வகுத்து அதன் முன்னுரிமைகளை வரைய வேண்டும்” என்றார். ஆரம்ப சுகாதார மையங்கள் திறம்பட செயல்படுவதற்கான அழுத்தம் இந்த கொள்கையில் அழுத்தம் திருத்தமாக வரையறுக்கப் படவேண்டும்.

ஆனால் ஆரம்பச் சுகாதார மையங்களை வலுப்படுத்துவதற்குப் பதிலாக புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.

புறக்கணிக்கப்படும் கிராமங்கள்:

பொதுவாக இந்தியாவில் மருத்துவர்-நோயாளி விகிதம் சர்வதேச அளவுகோலை வைத்துப் பார்க்கும் போது மோசமாக உள்ளது, கிராமப்புறங்களில் மருத்துவர்கள்-நோயாளிகள் விகிதமோ படுமோசமாக உள்ளது.

காரணம், மருத்துவர்கள் நகர்ப்புறங்களை விட்டு வெளியேற மறுப்பதே. இதற்கு தீர்வாக மாவட்ட மருத்துவமனைகளை கற்றுக் கொடுக்கும் மருத்துவமனைகளாக மாற்றினால் இங்கு உள்ளூர் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது இவர்கள் மருத்துவர்களான பிறகு அவர்கள் எந்தப் பகுதியிலிருந்து வருகிறார்களோ அங்கேயே மருத்துவப் பணியாற்ற தயங்க மாட்டார்கள். அதேபோல் கிராமப் புறங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் மிகவும் குறைவாக உள்ளன. திறமையான நர்ஸ்கள் குறைபாடும் உள்ளன. நர்ஸ்கள் கல்லூரி அதிகம் தேவைப்படுவதோடு, வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போல் ‘பயிற்சி நர்ஸ்கள்’ உருவாக்கப்பட வேண்டும். இவர்கள் அடிப்படை அல்லது முதற்கட்ட நோய்க்கணிப்பைச் செய்து என்னமாதிரியான சிகிச்சை தேவை என்பதை பரிந்துரைக்க வேண்டும்.

ஆனால் எம்பிபிஎஸ் கூடாரங்களோ, நர்ஸ்கள் மருந்துகளைப் பரிந்துரை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் பயிற்சி நர்ஸ்களுக்கான 2 ஆண்டுக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செயலாளர்கள் குழு ஒன்று பயிற்சி நர்ஸ்கள் அத்தியாவசிய மருந்துகளை பரிந்துரை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போதைய நடப்பு என்னவெனில் ஆரம்ப சுகாதார மையங்கள் போதிய அளவில் இயங்காமல் இருப்பதால், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் நோயாளிகள் வரத்து அதிகரித்துள்ளது. சில நோய்களுக்கு இங்கு வருவதற்கான தேவையே இல்லை, ஆனால் ஆரம்பச் சுகாதார மையங்கள் முறையாக இயங்காததால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.

இதைவிட மிக முக்கியமான பிரச்சினை, இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒன்று. ஏழை நோயாளிகள் மருத்துவரிடம் செல்வதற்குப் பதிலாக மருந்துக் கடைகளுக்கு நேரடியாகச் சென்று கடைக்காரர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இதற்காகத்தான் பயிற்சி நர்ஸ்கள் இந்த விஷயத்தில் அதிகம் பங்களிப்பு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

மூலம்: தி இந்து பிசினஸ்லைன்

தமிழில்: ஆர்.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x