Published : 15 Nov 2014 10:40 AM
Last Updated : 15 Nov 2014 10:40 AM

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒரு நாள் பைலட் ஆனான்: இந்திய விமானப்படை காட்டிய பரிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இந்திய விமானப்படையினர் காட்டிய பரிவால் ஒருநாள் ‘பைலட்' ஆக தன் கனவை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறான்.

பிஹாரைச் சேர்ந்தவர் கிரிஷ். இவரது மகன் சந்தன் (14). இவனுக்குப் புற்றுநோய் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அவன் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தான். ஆனால் அங்கு அவனுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் வீதியில் கடுங் குளிரில் தங்க வேண்டியிருந்தது.

அதைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள், சுமார் ரூ.12 லட்சம் நிதி திரட்டி அவனிடத்தில் கொடுத்தனர். தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் அவனுக்கு பைலட் ஆக வேண்டும் என்பது கனவு.

அந்தக் கனவை நிறைவேற்ற அவனது தந்தை மிகவும் போராடினார். இறுதியில் இந்திய விமானப்படையினர் அவருக்கு உதவ முன் வந்தனர். அவர்களின் முயற்சி யால் விமானப் படையினரைப் போலவே சீருடை அணிந்து முதலில் ‘சிமுலேட்டரில்' விமானம் இயக்கப் பயிற்சி பெற்றான். பின்னர் விமானிகளின் துணையோடு உண்மையான விமானத்தில் பைலட்டாகவே பறந்தான்.

பிறகு தரையிறங்கிய அவனுக்கு, சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதுகுறித்து விமானப்படை யினர் கூறும்போது, "நாங்கள் இந்த விமானங்களில் பறப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் புற்றுநோயுடன் போராடுவதுதான் மிகப்பெரிய விஷயம். இந்தச் சிறுவனின் அஞ்சாமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். அவனுக்கு எங்களின் சல்யூட்!" என்று நெகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x