Published : 01 Jul 2017 08:58 am

Updated : 01 Jul 2017 09:04 am

 

Published : 01 Jul 2017 08:58 AM
Last Updated : 01 Jul 2017 09:04 AM

குடியரசு தலைவரும் பிரதமரும் நள்ளிரவில் தொடங்கி வைத்தனர்: ஒரே நாடு.. ஒரே வரி! - நாடாளுமன்ற மைய அரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக முழக்கம்

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று முதல் அமலானது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை தொடங்கி வைத்தனர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் இதுவாகும்.


சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததால் மாநிலம் மற்றும் மத்திய அரசு விதிக்கும் 17 விதமான வரி விதிப்பு முறைகள் ஒழிந்து ஒரு முனை வரி மட்டுமே வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 128 கோடி மக்களும் இனி ஒற்றை வரி விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளனர்.

இப்புதிய வரி விதிப்பு காரணமாக ஒருமுகப்படுத்தப்படும் வரி விதிப்பு களால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். கடந்த மூன்று ஆண்டு களில் பிரதமர் நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட மிகச் சிறந்த பொருளாதார சீர்திருத்தமாக இது கருதப்படுகிறது.

நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதம் உயர்வதற்கு ஜிஎஸ்டி உறுதுணை புரியும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலாகல விழா

ஜிஎஸ்டி அறிமுக விழாவுக்காக நாடாளுமன்ற வளாகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. முன்னதாக இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சிகள் பின்னர் மாற்றம் செய்யப்பட்டு இரவு 10.55 மணிக்குத் தொடங்கின.

நாடாளுமன்ற மைய அரங்கிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஜிஎஸ்டி அமலாக்கமானது ஒரு கட்சிக்கான வெற்றி அல்ல. இது அனைத்து கட்சியினரின் முயற்சிகளுக்கும் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றியாகும்.

நீண்ட காலம் யோசித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு பல ஆண்டுகளாக பேச்சு நடத்தியதற்கு கிடைத்த வெற்றியாகும். கூட்டாட்சி தத்துவதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங் கிணைக்க சர்தார் வல்லப பாய் படேல் மேற்கொண்ட முயற்சி தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.

லாரிகள் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது இதனால் முடிவுக்கு வரும். 31 மாநிலங்களும், அனைத்து யூனியன் பிரதேசங்களும் இதன் மூலம் ஒன்றுபட்டுள்ளது. இது வெளிப்படையான வரி விதிப்பு முறையாகும். இது கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும் உதவும். நிர்வாகத்தில் புதிய கலாச்சாரத் தை ஏற்படுத்த உதவும். மேலும் அதிகாரி களின் கெடுபிடிக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். இதன் மூலம் வர்த்தகர்கள் அடையும் பலனை பொதுமக்களுக்கும் அளிப்பார்கள் என நம்புகிறேன். புதிய கண்ணாடிக்கு ஏற்ப கண்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்கிறதோ அதைப்போல வர்த்தகர்கள் ஜிஎஸ்டிக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி என்றால் நல்ல, எளிமையான வரி (Good and Simple Tax) என்பதாகும் என்றார்.

பேச்சின் நடுவே சாணக்கியர் பற்றி குறிப்பிட்ட மோடி, “எந்தவொரு இலக்கை அடைய முடியாது என்று தோன்று கிறதோ அதை கடின உழைப்பால் அடைய முடியும்’’ என்று கூறியிருந்ததை சுட்டிக் காட்டினார். ஜிஎஸ்டி-யானது வரி சீர்திருத்தம் அல்ல, இது பொருளாதார சீர்திருத்தம் என்றார் மோடி.

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி பேசும்போது, “வர்த்தகர்கள் முறையாக வரி செலுத்தும்போதுதான் அதன் பலன் நுகர்வோருக்குக் கிடைக்கும். இதனால் நுகர்வோர் நேர்மையான வர்த்தகர்களை ஊக்குவிக்க வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கத்தின் வெற்றியே அதை சிறப்பாக செயல்படுத்துவதில்தான் உள்ளது” என்றார்.

உரத்துக்கு வரி குறைப்பு

ஜிஎஸ்டி விழா தொடங்குவதற்கு முன்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் உரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதேபோல டிராக்டர்களுக்கான பிரத்யேக பாகங்களுக்கான வரி 28 சத வீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக் கப்படுவதாக ஜேட்லி அறிவித்தார்.

4-வது முறையாக நள்ளிரவு விழா

சுதந்திர இந்திய வரலாற்றில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவு விழா நடைபெற்றது நேற்று நான்காவது முறையாகும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, அதாவது 1947-ல் ஆகஸ்ட் 14-15-ம் தேதி இரவு முதல்முறையாக நள்ளிரவு விழா நடைபெற்றது. இதையடுத்து 1972-ம் ஆண்டு சுதந்திர தின வெள்ளி விழா நாளில் இரண்டாவது முறையும், 1997-ல் சுதந்திர தின பொன் விழா தினத்தில் மூன்றாவது முறையாகவும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவு விழா நடைபெற்றது.

மகிழ்ச்சி குறும்படம்

ஜிஎஸ்டி அமலாக்கத்தை தொடர்ந்து குறும்படம் திரையிடப்பட்டது. அந்தக் காட்சிகளில் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையால் ஏழைகள், நடுத்தர மக்கள், தொழில்முனைவோர், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை செய்வதுபோலவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் பணத்தை எண்ணும் காட்சிகளும் காட்டப்பட்டன. இதை எம்பி.க்கள் ரசித்தனர்.

மேடையில் தேவகவுடா

ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சியில் | படம்: பிடிஐ

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியில் மேடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

முன்னாள் பிரதமர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பிரதமர் நரேந்திர மோடி அருகே மேடையில் அமர்ந்திருந்தார். நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததால் மற்றொரு முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை.

மாபெரும் வரி சீர்திருத்தம்

ஜிஎஸ்டி அமலாக்கமானது மாபெரும் வரி சீர்திருத்தம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வர்ணித்தார். முன்னதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோருக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கி கவுரவித்தார். ஆங்கிலத்தில் பேச்சைத் தொடங்கிய அவர் பிறகு ஹிந்திக்கு மாறினார். அவரது பேச்சு விவரம்: பாஜக தலைமையிலான அரசு முன்னர் வாஜ்பாய் தலைமையில் பதவியிலிருந்தபோதுதான் ஜிஎஸ்டி-க்கான யோசனை வித்திடப்பட்டது. ஆண்டுகள் பல உருண்டோடி இப்போது இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வெற்றிக்கு ஒரு கட்சி மட்டுமே காரணமாகாது. பல கட்சிகளின் ஒட்டுமொத்த முயற்சியால்தான் ஜிஎஸ்டி அமலாக்கம் சாத்தியமாகியுள்ளது என்றார் ஜேட்லி.குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிபிரதமர் மோடிநள்ளிரவில் தொடங்கி வைத்தனர்ஒரே நாடு.. ஒரே வரி!நாடாளுமன்ற மைய அரங்கம்பிரதமர் நரேந்திர மோடி உற்சாக முழக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x