Last Updated : 02 Jul, 2017 11:40 AM

 

Published : 02 Jul 2017 11:40 AM
Last Updated : 02 Jul 2017 11:40 AM

ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து: ஆசம் கான் மீது தேசத்துரோக வழக்கு

ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஆசம் கான் மீது உ.பி.யில் நேற்று தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேவேளையில் ஆசம்கானின் தலை மற்றும் நாக்கை கொண்டு வருவோருக்கு பரிசு வழங்கப்படும் என வலதுசாரி அமைப்புகள் அறிவித்துள்ளன.

உ.பி. முன்னாள் அமைச்சரான ஆசம் கான் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்தை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்பவர். சமீபத்தில் அவர் கூறும்போது, “பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால் சில நேரங்களில் அவர்களின் பிறப்பு உறுப்புகளை துண்டிக்க வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றனர்” என்றார்.

ராணுவ வீரர்கள் குறித்து தரம் தாழ்ந்த கருத்து கூறிய ஆசம் கானை சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இந்நிலையில் ராம்பூரில் சந்த்பூர், சிவில் லைன்ஸ் ஆகிய இரு காவல் நிலையங்களில் ஆசம் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்த்பூர் காவல் நிலைய அதிகாரி அஜய் குமார் சிங் கூறும்போது “ஆசம் கான் மீது இந்திய தண்ட னைச் சட்டப் பிரிவுகள் 124ஏ (தேசத்துரோகம்), 131 (கலவரத்தை தூண்டுதல்), 505 (விஷமச் செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். விஎச்பி தலைவர் அனில் பாண்டே அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மீரட் நகரில் ஆசம் கான் மீது உள்ளூர் பஜ்ரங் தளம் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆசம் கான் தலைக்கு பரிசு

இதனிடையே ஆசம் கானின் நாக்கை துண்டித்துக் கொண்டு வருவோருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி.யின் ஷாஜகான்பூர் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் குமார் அவஸ்தி அறிவித்துள்ளார்.

கோரக் ஷா தலைவர் முகேஷ் படேல், ஆசம் கானை தீவிரவாதி என்று கூறியுள்ளார். கானின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஆசம் கானுக்கு எதிரான கொலை மிரட்டல் தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

-இதனிடையே உ.பி. அமைச்சர் பல்தேவ் சிங் ஆலக் கூறும்போது, “ஆசம் கானின் பேச்சை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x