Published : 06 Jan 2017 11:23 AM
Last Updated : 06 Jan 2017 11:23 AM

பெண்களுக்கு பாதுகாப்பும் சம உரிமையும் அளிக்க வேண்டும்: விராட் கோலி

நம் நாடு பெண்களுக்கும் பாதுகாப்பானதாகவும், அனைத்து தரப்பு பெண்களையும் சமமாக நடத்துவதாகவும் இருக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று பெங்களூருவில் பரவலாக பல இடங்களில் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடந்தன. இதேபோல் தலைநகர் டெல்லியிலும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இவை நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதற்கிடையில் பெங்களூரு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர், "பெண்கள் மேற்கத்திய உடைகள் அணிவதாலேயே இத்தகைய பாலியல் அத்துமீறல் நடைபெறுகிறது" எனக் கூறியிருந்ததார்.

அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் சம்பவங்களைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் தோன்றி பேசியிருக்கிறார்.

அந்த வீடியோவில் விராட் கோலி, "இதுமாதிரியான செயல்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்ட சிலர் இருக்கும் சமூகத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைத்து வேதனையடைகிறேன். இத்தகைய அத்துமீறல்களையும் சிலர் ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நம் நாட்டில் ஆணும் பெண்ணும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். பெண்கள் மீது மரியாதை கொள்வோம். அவர்கள் மீது இரக்கம் கொள்வோம்.

அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினராக நாம் இருந்திருந்தால் எவ்வளவு வேதனைப்பட்டிருப்போம். அந்த இடத்திலிருந்து யோசித்துப் பாருங்கள். நம் சிந்தனைகளில் மாற்றம் வேண்டும்" எனப் பேசியிருக்கிறார்.

மேலும், அவர் பதிந்திருந்த ட்வீட்டில், "நம் நாடு பெண்களுக்கும் பாதுகாப்பானதாகவும், அனைத்து தரப்பு பெண்களையும் சமமாக நடத்துவதாகவும் இருக்க வேண்டும். உங்கள் சிந்தனைகளை மாற்றுங்கள் உங்களைச் சுற்றியுள்ள உலகம் மாறும். பெண்களை சிறுமைப்படுத்தும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைந்து போராடுவோம்" என வலியுறுத்தியிருக்கிறார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.



Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x