Last Updated : 03 May, 2017 09:55 AM

 

Published : 03 May 2017 09:55 AM
Last Updated : 03 May 2017 09:55 AM

பொறியியல் மாணவர்களுக்கு பணியிடங்களில் கட்டாயப் பயிற்சி: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பணியிடங்களில் கட்டாயம் பயிற்சி அளிக்கும் நடைமுறை அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பணியிடங்களில் பயிற்சி அளிப்பது தற்போது கல்வி நிறுவனங்களின் சொந்த முடிவாக உள்ளது. மேலும் கெமிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற ஒருசில பாடப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே பணியிடப் பயிற்சி அளிக்கப்படு கிறது. இந்தப் பயிற்சி மாணவர் களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் நாட்டின் அனைத்து பொறியியல் மாணவர் களுக்கும் பணியிடப் பயிற்சியை கட்டாயமாக்குவது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசித்து வந்தது.

இதன் மீது கருத்து கேட்டு நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி களுக்கு ஏஐசிடிஇ சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. இதில் பலரும் பணியிடப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியிருந் தனர். இந்நிலையில் பணியிடப் பயிற்சியை கட்டாயமாக்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஏஐசிடிஇ அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “பொறியியல் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு முதல் பணியிடப் பயிற்சி பெறலாம். எனினும் இந்தப் பயிற்சியை இறுதி ஆண்டுக்குள் முடித்து விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு 4 ஆண்டு படிப்புக் கான பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கான காலம் குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் ஒரு செமஸ்டர் தேர்வு வரை என இருக்கும். இந்த கால அளவை பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களே முடிவு செய்யலாம்” என்றார்.

ஏஐசிடிஇ-யின் முடிவை தொடர்ந்து, பணியிடப் பயிற்சிக் கான ஆயத்தப் பணிகள் தொடங்கி யுள்ளன. இதில் ‘இன்டர்ன்ஷாலா’ என்ற அமைப்புடன் ஏஐசிடிஇ நேற்று முன்தினம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அனைத்து வகை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பணியிடப் பயிற்சியை இன்டர்ன்ஷாலா ஏற்கெனவே இலவசமாக தேடித் தருகிறது. இந்த அமைப்பின் மூலம், ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் 40,000 நிறுவனங்களில் பணியிடப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஐஐடி, என்ஐடி ஆகிய தொழில் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ கட்டுப்பாட்டின் கீழ் வராது என்ப தால் அவற்றுக்கு இந்தப் பணியிடப் பயிற்சி முடிவு பொருந்தாது.

நாட்டில் அதிக அளவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 660 கல்லூரிகள் இயங்கு கின்றன. இவற்றிலிருந்து ஆண்டு தோறும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் வெளிவருகின்றனர். இதுவன்றி தன்னாட்சி பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களும் தமிழகத்தில் உள்ளன. ஆனால் தொழிற்சாலைகள் 5,700 மட்டுமே உள்ளன. எனவே பணியிடப் பயிற்சிக்காக தமிழக பொறியியல் மாணவர்கள் வெளிமாநிலங்கள் செல்லவேண்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x