Last Updated : 08 Mar, 2017 02:18 PM

 

Published : 08 Mar 2017 02:18 PM
Last Updated : 08 Mar 2017 02:18 PM

நீட் மசோதாவை பரிசீலிப்பதாக மத்திய அரசு உறுதி: ஜவடேகரை சந்தித்த பின் தமிழக அமைச்சர்கள் தகவல்

நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதை பரிசீலிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

இந்தத் தகவலை, அவருடன் இன்று காலை சந்திப்பு நடத்திய தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்கள் விலக்கு பெற நீட் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கான குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற அந்த மசோதா மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களிடம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டி இன்று (புதன்கிழமை) காலை தமிழக அமைச்சர்களான கே.பி.அன்பழகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர்.

காலை 11.00 மணிக்கு ஜவடேகருடன் இருந்த சந்திப்பின் காரணமாக இருவரும் விமான நிலையத்தில் இருந்து நேரிடையாக சாஸ்திரிபவன் வந்தடைந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மசோதா மனிதவள மேம்பாடு, மருத்துவ நலம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இன்று தமிழக முதல்வர் அனுமதியுடன் நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் அரசு செயலாளர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அவரிடம் தமிழகத்திற்கு விலக்கு வேண்டி எடுத்துரைத்து வலியுறுத்தினோம். இதைப் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான எங்கள் போராட்டம் தொடர்கிறது. அதேநேரத்தில் நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

மருத்துவத்தை போல் பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வினை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்காகவும் தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நுழைவுத்தேர்வை நடத்தி தமிழகத்தின் பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை அமைச்சரிடம் எடுத்துக் கூறி எங்களுக்கு மற்றொரு நுழைவுத்தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தி உள்ளோம். இதையும் அவர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்" எனத் தெரிவித்தார்.

நீட் மசோதாவிற்காக தமிழக இரு அமைச்சர்கள் அடுத்து மத்திய மருத்துவ நலத்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x