Published : 31 Jul 2016 09:22 AM
Last Updated : 31 Jul 2016 09:22 AM

அசாம், பிஹார் வெள்ளத்தில் 53 பேர் பலி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

அசாம், பிஹாரில் கனமழை பெய்து வருகிறது. அசாமில் 27 பேரும் பிஹாரில் 26 பேரும் மழைக்கு பலியாகி உள்ளனர். இரு மாநிலங்களிலும் 45 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் லஷ்மிபூர், கோலாகாட், ஜோர்கட், சோனிட்பூர் உட்பட 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. கசிரங்கா தேசிய பூங்காவின் 80 சதவீத பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவ வீரர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்புகளால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். 19 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலி காப்டர் மூலம் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வீசப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அசாமுக்கு நேரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அவருடன் உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு, வடகிழக்கு மாநில மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரும் உடன் சென்றனர்.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அசாம் முதல்வர் சர்வானந்த சோனவாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டனர். பின்னர் பகத்கோன் நிவாரண முகாமுக்கு நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டனர்.

இதன்பின் நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: அசாம் வெள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 6000 பேரை மீட்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். அசாம் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளை யும் மத்திய அரசு வழங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிஹாரில் 26 பேர் பலி

பிஹார் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் புர்னியா, கிஷான் கன்ஞ், பகல்பூர், கோபால்கன்ஞ் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் வெள்ளத் தில் மூழ்கியுள்ளன. அங்கு கடந்த சில நாட்களில் 26 பேர் பலியாகி உள்ளனர். 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிஹாரில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x