Published : 28 Oct 2013 11:51 AM
Last Updated : 28 Oct 2013 11:51 AM

தொடரும் பேரழிவின் நீட்சி! - உத்தரகாண்ட் இன்று

உத்தரகாண்ட் மக்களுக்கு மறக்க முடியாத மாதமாகிவிட்டது 2013, ஜூன். பேரழிவு நடந்து நான்கு மாதங்கள் ஆகியும் புதைந்துபோன பூமியில் இருந்து சடலங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பேரழிவின் நீட்சியாக தொடர்கின்றன சிறிதும் பெரிதுமான நிலச்சரிவுகள். வழக்கமாக வயதான கால்நடைகளைத்தான் கங்கையில் உயிரோடு நேர்ந்துவிடுவார்கள். ஆனால், ஜூன் மாத கங்கையின் பசி சுமார் 25 ஆயிரம் கால்நடைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விட்டது. கட்டிடங்கள், பாலங்கள், நீர் மின் நிலையங்கள், மின் கம்பங்கள், மரங்கள் என கங்கை அழித்த கட்டுமானச் சிதைவுகள் மட்டும் கேதார்நாத் பள்ளத்தாக்கில் ஒரு லட்சம் டன் குவிந்து கிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்தவே மூன்று மாதங்கள் ஆகும். அதன் பின்பு மீண்டெழ வேண்டும்.

உத்தரகாண்ட் சமவெளி பூமி அல்ல. மாநில மொத்த நிலப்பரப்பான 54 ஆயிரம் சதுர கி.மீட்டரில் 90 % மலைகள். அதில் 60 % காடுகள். கங்கை வெள்ளத்தின் சீற்றத்தில் மலைச்சரிவுகள் சரிந்ததில் 30 ஆண்டு கால பழமையான சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. மாநில அரசும் இந்திய ராணுவமும் முழு வீச்சில் பணிகளை முடுக்கிவிட்டிருந்தாலும்கூட பாதி அளவுதான் மீள முடிந்திருக்கிறது. பல்வேறு பகுதிகளை நெருங்கவே முடியாத அளவுக்கு அதல பாதாளத்துக்கு பிளந்துக் கிடக்கிறது இமயம்.

சுமார் 200 கிராமங்களுக்கு சாலைகள் இல்லை. உத்தரகாசி தொடங்கி கங்கோத்திரி வரை முற்றிலுமாக சாலைகள் அழிந்துவிட்டன.

இருளில் தவிக்கும் கிராமங்கள்!

பேரழிவுக்கு முன்பே உத்தரகாண்ட்டில் கடும் மின் தட்டுப்பாடுதான். பக்கத்து மாநிலங்களில் வாங்கி சமாளித்துக்கொண்டிருந்தார்கள். மின் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் கங்கையில் 500-க்கும் மேற்பட்ட நீர் மின் நிலையப் பணிகளைத் தொடங்கினார்கள். ஆனால், அதுவே பேரழிவுக்கு முக்கியக் காரணமாகிவிட்டது. மின் நிலையங்களில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பு அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் அவைகளை சீரமைக்கவே சில மாதங்கள் தேவை.

தோண்டத் தோண்ட உடல்கள்!

பேரழிவு முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும்கூட இன்னமும் சடலங்களை மீட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் கேதார்நாத் பகுதியில் 48 சடலங்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. கடந்த அக்டோபர் 22-ம் தேதி மீண்டும் அதே பகுதியில் அடையாளமே காணமுடியாத அளவுக்கு மிகவும் அழுகிய நிலையில் மேலும் எட்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மட்டுமே அடையாளம் தெரியாத 541 சடலங்கள் மீட்கப்பட்டு எரிக்கப்பட்டன.

ஆட்டிப் படைக்கும் டெங்கு!

பேரழிவின் பெரும் விளைவு டெங்கு. இடிபாடுகளில் தேங்கிய மழை நீர், மலை போல் குவிந்த குப்பை, அழுகிய பிணங்கள் என சுகாதாரம் மொத்தமாகக் கெட்டுவிட கொசுக்களின் அபரீத பெருக்கத்தால் டெங்கு காய்ச்சலில் சிக்கித் தவிக்கிறது உத்தரகாண்ட். அரசு தரப்பில் 352 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன கல்வி!

பள்ளிக் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம். 139 நடுநிலைப்பள்ளிகள், 131 தொடக்கப் பள்ளிகள், 28 தரம் உயர்த்தப்பட்ட தொடக்கப் பள்ளிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. 577 தொடக்கப்பள்ளிகள் பாதியளவு சேதம் அடைந்துள்ளன. பள்ளிகளை புனரமைக்க மத்திய அரசு 35.94 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆனால், மாநில அரசோ 85.36 கோடி வேண்டும் என்று கேட்கிறது.

இதற்கிடையே பெற்றோரை, உடைமைகளை இழந்ததாலும், பேரழிவு தந்த அதிர்ச்சியாலும், சரியான உணவு கிடைக்காததாலும் பள்ளிக் குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குழந்தைகளை மன அதிர்ச்சியில் இருந்து மீட்க யோகா பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடவுளில் பூமியில் திறக்கப்பட்ட கோயில்கள்!

இவ்வளவு இடர்ப்பாடுகளின் இடை யிலும் கடந்த அக்டோபர் 5-ம் தேதி கேதார்நாத், பத்ரிநாத் புனிதத்தலங்களை திறந்திருக்கிறது மாநில அரசு. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு மட்டுமே அங்கு செல்ல அனுமதி. அதற்கும் உடல் தகுதித் தேர்வு உண்டு. மிகவும் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதி கிடையாது.

3000 குதிரைகள் எங்கே?

இமயமலைச் சரிவுகளில் அழிந்துபோன சுமார் 200 கிராம மக்களின் பிரதானத் தொழில், சுற்றுலா வழிகாட்டல். கார்வாலி மொழி பேசும் அம்மக்களின் முக்கிய சொத்து குதிரைகள்தான். புனித யாத்திரைக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களை குதிரைகளில் அமர வைத்து பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டுவார்கள். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 முதல் 500 வரை வருமானம் கிடைத்தது. ஆனால், பொங்கி வந்த பெருவெள்ளத்தில் சுமார் 3000 குதிரைகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இன்று சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் அவர்களை அழைத்துச் செல்ல குதிரைகள் இல்லை. சுற்றுலா வழிகாட்டிகளாக இருந்தவர்கள் இன்று புனிதத் தலங்களில் பிச்சை எடுத்தும் மடங்களில் பிரசாத உணவு உண்டும் உயிரை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்!

பேரழிவு காரணம் ஆராயக் கமிட்டி

உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி வழிகாட்டுதலின்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரகம் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இக்கமிட்டி இமயமலை மற்றும் கங்கை, அலெக்நந்தா, பாகீரதி நதிகளின் பல்லுயிர்ச் சூழல் பற்றியும் பேரழிவுக்கு நீர்மின் நிலையங்களும் ஒரு காரணமா என்பது பற்றியும் ஆய்வு செய்யும்.

இப்பகுதியில் புதிதாக எந்த நீர் மின் நிலையத் திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரைவில் சீரடைய வேண்டும் உத்தரகாண்ட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x