Last Updated : 22 Feb, 2016 12:57 PM

 

Published : 22 Feb 2016 12:57 PM
Last Updated : 22 Feb 2016 12:57 PM

கும்பல்களின் தாக்குதலுக்கு அஞ்சினோம்: தலைமறைவுக்கு ஜேஎன்யூ மாணவர்கள் விளக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக (ஜே.என்.யூ) சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மாணவர்கள், தங்கள் பிரச்சனையில் உலக அளவில் கிடைத்த ஆதரவுக் குரலால் கைதாக முடிவு செய்ததாகக் கூறியுள்ளனர்.

மேலும், கும்பல்களால் அடித்து கொல்லப்பட்டு விடுவோம் எனப் பயந்து வெளியில் வரவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஜே.என்.யூ. வளாகத்தில் நடைபெற்ற அப்சல் குருவின் நினைவு தினத்தில் தேசவிரோத கோஷமிடப்பட்டதாக புகார் எழுந்தது. இதன் மீதான வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து அதன் மாணவர் தலைவர் கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டார்.

மேலும் ஆறு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆய்வு மாணவர் உமர் காலீத் முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவராக குறிப்பிடப்பட்டிருந்தார். இவருக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் டெல்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்த அறிக்கையில் கூறி இருந்தது. இவர்களுடன் சுமார் இருபது மாணவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாக போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு காலீத் உட்பட தேடப்பட்ட வந்த மாணவர்களில் ராமா நாகா, அசுதோஷ்குமார், அனந்த் பிரகாஷ் மற்றும் அனிர்பான் பட்டாச்சார்யா உட்பட சில மாணவர்கள் ஜே.என்.யூ வளாகம் திரும்பினர். ஆய்வு மாணவர்கள இவர்களில் அசுதோஷ் முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஆவார். இவர்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட கண்ணய்யா மீது நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம், அனைத்து மாணவர்களையும் கைதாகி வழக்கை சந்திக்க வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜே.என்.யூ வளாகத்தில் இருந்த அசுதோஷ்குமார் கூறுகையில், "எங்கள் பிரச்சனையில் உலகம் முழுவதிலும் இருந்து கிடைத்துள்ள பேராதரவு அனைவரையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால், போலீஸிடம் கைதாகி விசாரணைக்கு ஒத்துழைப்பது என முடிவு செய்தோம்.

நான், அனிர்பான் மற்றும் ஆனந்துடன் இந்த பகுதியில் தான் இருந்தோம். ஆனால், தற்போது நிலவும் சூழலின்படி, கும்பல்களால் அடித்து கொல்லப்பட்டு விடுவோம் எனப் பயந்து வெளியில் வரவில்லை. நாங்கள் தேசவிரோத தவறுகள் எதையும் செய்யவில்லை. எங்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வீடியோக்களால் சிக்க வைக்கப்பட்டுள்ளோம். இனி நாம் எங்கும் சென்று ஒளிய மாட்டோம். எங்கள் பல்கலையை தேசவிரோதியாக சித்தரிக்கப்படுவதை எதிர்க்கும் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கண்ணய்யா கைதிற்கு பின் டெல்லி பல்கலைகழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களின் மாணவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இத்துடன் நாடு முழுவதிலும் உள்ள ஜே.என்.யூ முன்னாள் மாணவர்களும் கண்ணய்யாவின் கைதை கண்டித்து வருகின்றனர். இதுவன்றி உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஜே.என்.யூ சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகளில் நடவடிக்கைகள் மீது கேள்வி எழுப்பி உள்ளன.

கடந்த 10 நாட்களில் காலீத் உட்பட தேடப்பட்டு வந்த மாணவர்கள் ஒருவொருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் கைதாக அவரவர் தனியாக முடிவு எடுத்ததாகவும், அனைவரும் இணைந்து பேசி எடுக்கவில்லை என்றும் தேடப்பட்டு வந்த மாணவர்கள் வளாகத்தில் கூறி வருகின்றனர். தம்மை போலீஸார் தேடி வருவதன் காரணமாக தன் குடும்பத்தாருக்கு வந்த கொலை மிரட்டல் மற்றும் தன் சகோதரிகள் மீது பாலியல் வன்முறை நடத்துவதாக முகநூல்களில் வந்த மிரட்டல்களால் தமது மனநிலை மிகவும் பாதித்து இருப்பதாகவும் காலீத் வளாகத்தின் மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும், நேற்று இரவு ஜே.என்.யூ வளாகத்தில் கண்ணய்யாவின் கைதிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த விஷயத்தில் எடுக்கப்பட வேண்டிய தொடர்வரும் நடவடிக்கைகள் குறித்து அகில இந்திய மாணவர் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று வளாகத்தில் கூடி முடிவு எடுக்க உள்ளது. இந்த சங்கம் இடதுசாரி ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பு ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x