Last Updated : 23 Apr, 2017 10:48 AM

 

Published : 23 Apr 2017 10:48 AM
Last Updated : 23 Apr 2017 10:48 AM

காஷ்மீரை நாம் இழந்துவிட்டோமா?

காஷ்மீர் மாநிலத்தை நாம் இழந்துவிட்டோமா என்று கேட்டால், தெளிவான பதில் ‘இல்லை’ என்பதாகும்; இந்த பதில் முழுமையானதும் அல்ல. 1947 முதல் காஷ்மீரை சில முறை இழந்திருக்கிறோம். முதல் முறை, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை பாகிஸ்தானியத் துருப்புகள் திடீரென சூழ்ந்துகொண்டு கைப்பற்ற முயன்றனர். அந்நாளில் லெப். கர்னலாக இருந்த ஹர்பக் ஷ் சிங் சிறு படைப்பிரிவுடன் டகோடா ரக விமானத்தில் சென்று பாகிஸ்தானியர்களை விரட்டிவிட்டு விமான நிலையத்தை மீட்டார். பின்னாளில் அவர் லெப். ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அந்நாளில் எப்படிப்பட்ட மோசமான நிலையில் நம்முடைய ராணுவ பலம் இருந்தது என்பதை அறிய, நூலகத்துக்குச் சென்று லெப். ஜெனரல் லயோனல் பிரதீப் சென் எழுதிய ‘ஸ்லெண்டர் வாஸ் த திரெட்’ (Slender Was The Thread) புத்தகத்தை வாசியுங்கள்.

இரண்டாவது முறை நாம் காஷ்மீரை இழந்தது 1965-ல். 1962-ல் சீன ஊடுருவலால் நாம் பாதிப்படைந்ததும் சீனத்துடன் நட்பை வளர்த்துக் கொண்ட பாகிஸ்தான், ஹஸ்ரத்பால் மசூதியிலிருந்த புனித நினைவுப்பொருள் திருடப்பட்டதாகக் கூறி ஏராளமான துருப்புகளை இந்தியாவுக்குள் அனுப்பிவைத்தது. அப்போது நேருவின் அரசியல் செல்வாக்கு குறைந்து கொண்டிருந்தது. அயூப்கான் பாகிஸ்தான் அதிபராகப் பதவி வகித்தார். அந்த ஊடுருவலுக்கு ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்’ என்று பெயர் சூட்டியிருந்தனர். பிறகு சாம்ப் பகுதியில் ‘கிராண்ட் ஸ்லாம்’ என்ற பெயரில் இன்னொரு ராணுவத் தாக்குதலையும் நடத்தினர். ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டுமே கிட்டத்தட்ட காஷ்மீரை நம்மிடம் பறித்தேவிட்டது. இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள லெப். ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் எழுதிய ‘வார் டெஸ்பாட்சஸ்’ (War Despatches) என்ற நூலைப் படிக்கலாம்.

அப்போது இந்திய ராணுவத்தில் எதற்கும் அஞ்சாத, அறிவுக்கூர்மை மிக்க ராணுவ தளபதிகள் பலர் இருந்தனர். அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் காஷ்மீரைப் பாகிஸ்தானின் பெரும் தாக்குதலிலிருந்து மீட்டனர்.

1971-ல் பூஞ்ச், சாம்ப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் பெருந்தாக்குதல் நடத்தியது, ஆனால் வெற்றி பெற முடியவில்லை. பிறகு 1999-ல் கார்கிலில் ஊடுருவியது. கடந்த 50 ஆண்டுகளில் காஷ்மீர் பரப்பில் சிறிதளவையும் நாம் பாகிஸ்தானுக்கு இழக்கவில்லை. அப்படியானால் இப்போது நாம் எதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்கிறது?

1965-ல் ஊடுருவியவர்கள் பற்றி உள்ளூர் மக்கள்தான் இந்திய ராணுவத்துக்குத் தெரியப்படுத்தினர். இப்போது பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்கும் என்ற அச்சம் கிடையாது. ஆனால் காஷ்மீரிகளே நமக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டனர். உள வியல்ரீதியாகவும் உணர்வு அடிப்படையிலும் காஷ்மீரை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். 1. இதை எப்படி நாம் தெரிந்துகொள்வது? 2. நமக்கு அக்கறை இருக்கிறதா? 3. நாம் அக்கறை காட்டத்தான் வேண்டுமா?

இரண்டாவது கேள்விக்கு முதலில் பதில் அளிப்போம். இல்லை, ஆண்டுக்கணக்காக இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லாதவர்கள் மீது அக்கறை எதற்கு, நம்முடைய ராணுவ வீரர்கள் மீதே கல்லெறியும்போது நாம் மட்டும் அவர்களுக்காக அனுதாபப்படுவானேன்?

முதல் கேள்விக்கான பதில், சம்பவங்களைப் பார்க்கும்போதே தெரிகிறது. கடந்த சில மாதங்களாக பள்ளத்தாக்கில் இருக்கும் காஷ்மீரிகள் போலீஸ்காரர்களின் லத்திகள், துப்பாக்கிக் குண்டுகளுக்கெல்லாம் அஞ்சாமல் ஆயிரக்கணக்கில் பொது இடங்களில் திரள்கின்றனர். இன்னும் சில வாரங்கள் சென்றால், தங்களுடைய சக காஷ்மீரிகளைக் கூட மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி பலி கொடுக்கத் தயங்கமாட்டார்கள்.

மாநிலத் தலைநகர் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்களிக்க 7% வாக்காளர்கள் மட்டுமே வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீர் குறித்து நாம் அக்கறை காட்ட வேண்டுமா என்ற கேள்வி சிக்கலானது. நீங்கள் அதிதீவிர தேசியவாதியாக இருந்தால், துரோகிகள் பாகிஸ்தானுக்குச் செல்லட்டும் என்றுதான் கூறுவீர்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலும் பிற மாநிலங் களிலிருந்து கொண்டுவந்த இந்துக்களைக் குடியேற்ற எத்தனிப்பீர்கள். காஷ்மீரிகளை வேறு மாநிலங்களுக்குக் குறிப்பாக தமிழ்நாட்டுக்குக் கொண்டு சென்று சிறையில் அடைக்கச் சொல்வீர்கள். சில நூறு பேரை சுட்டுக்கொல்ல வேண்டுமென்றாலும் பகலில், கேமராவில் தெரியும்படியாகவே சுட்டுத்தள்ளுங்கள், பிறகு அமைதி திரும்பும் என்று ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகள் சிலர் கூறுகின்றனர். இப்படிச் செய்தால் காஷ்மீரை மட்டுமல்ல இந்தியாவையும் நாம் இழந்துவிடுவோம்.

1967-ல் அரபுகளின் பெரும் நிலப்பரப்பை ஆறு நாள் சண்டையில் கைப்பற்றிய இஸ்ரேல், நிலத்தைத் தொடர்ந்து தன்னிடமே வைத்துக்கொண்டு, மக்களை வெளியேற்றுகிறது. ராணுவ பலத்தில் இஸ்ரேல் சிறந்து விளங்குகிறது. மேற்கத்திய நாடுகளின் இடைவிடா ஆதரவு அதற்கு இருக்கிறது. இஸ்ரேலிய ராணுவத்துக்கும் உளவுத்துறைக்கும் எல்லையில்லா அதிகாரம் இருக்கிறது. அரசு எடுக்கும் முடிவுக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் தேசபக்தியுள்ள குடிமக்களுக்குக் குறைவே இல்லை. ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் யூதர்கள் தொடர்ந்து இஸ்ரேலில் குடியேற வந்துகொண்டே இருக்கின்றனர். இருந்தாலும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை நிறுத்த முடியாமல் தவிக்கிறது.

இஸ்ரேலைப் போல இந்தியாவிலும் செய்ய முடியும் என்று யாராவது நினைத்தால் அது பெரிய தவறு. இஸ்ரேலிடம் பல திறமைகள் இருந்தாலும் இந்தியா இஸ்ரேலாகக் கூடாது.

முழு இந்தியாவுக்கும் ஒரு நிர்வாக முறை, காஷ்மீருக்குத் தனி நிர்வாக முறை என்று நம்மால் கடைப்பிடிக்க முடியாது. காஷ்மீரை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ஒரே நாடு, இருவித அரசுகள் என்பதற்கு அரசியல் சட்டம் இடம் கொடுக்காது. சீனா போன்ற சர்வாதிகார நாட்டில்தான் அது சாத்தியம், உதாரணம் - ஹாங்காங்.

டெல்லியில் உள்ள சத்ய சாய்பாபா அரங்கத்தில், காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் ‘ரா’ அமைப்பின் தலைவராக இருந்தவருமான கிரீஷ் சந்திர சக்சேனாவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது காஷ்மீரில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி உச்சத்தில் இருந்தது. காஷ்மீரை இழந்துவிட்டோமா என்று அவரிடமே கேட்டேன். அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று பதில் அளித்தார். என்ன நடந்தாலும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்ற உறுதி நாட்டுக்கு இருக்க வேண்டும், அது நம்மிடம் இருக்கிறது என்று அதற்கான காரணத்தையும் பதிலாகக் கூறினார். இந்தியாவுடன் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கைத் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட, அரசியல் உத்தி அவசியம் என்றார் அவர். இப்போது இருந்தாலும் அதையேதான் கூறுவார்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x