Published : 10 Jan 2017 09:45 AM
Last Updated : 10 Jan 2017 09:45 AM

இந்தியாவின் பங்களிப்புடன் மலேசிய தமிழர்களின் நிலை மேம்படுத்தப்படும்: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமி வேலு தகவல்

இந்தியாவின் பங்களிப்புடன் மலேசிய தமிழர்களின் நிலை மேம்படுத்தப்படும் என மலேசியத் தலைவர் டத்தோ சாமி வேலு தெரிவித்தார்.

பெங்களூருவில் 14-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் பங்கேற்பதற்காக மலேசிய இந்திய காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டத்தோ சாமி வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் சரவணன் உட்பட 200-க்கும் அதிகமான மலேசிய வாழ் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெங்களூரு வந்துள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் மேம்பாடு, இந்திய பாரம்பரியம் சுகாதார முறைகள் தொடர்பான கருத்தரங்கில், டத்தோ சாமி வேலு, சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.இது தொடர்பாக டத்தோ சாமி வேலு கூறும்போது, “நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டுச் சென்றிருந்தாலும், ஒவ்வொரு முறை தாய்நாட்டுக்கு வரும்போதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்மாநாடு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியாவில் வாழும் மக்களுக்கும் இடையே உறவு பாலமாக இருக்கிறது.

இம்மாநாட்டில் பிரதமர் மோடியை நானும், சுப்பிரமணியமும் சந்தித்துப் பேசினோம். அப்போது வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டுவரும் புதிய திட்டங்களை விளக்கினார். இந்தியாவின் பங்களிப்புடன் மலேசியாவில் வாழும் இந்தியர் களின், குறிப்பாக‌ தமிழர்களின் நிலையை மேம்படுத்தப்படும். மலேசிய இந்தியர்களின் வெற்றியை மீண்டும் நிலைநாட்டும் வகையில், மலேசிய இந்திய காங்கிரஸுக்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டுள்ளேன் என அவரிடம் தெரிவித்தேன்” என்றார்.

மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறும்போது, “இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே நட்புறவை எந்தெந்த வகையில் வலுப்படுத்த முடியும் என பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மோடி மலேசியா வந்திருந்த போது, ம‌லேசியாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் மக்களுக்கு இணைய விசா வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். இப்போது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? வேறு எதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என கேட்டறிந்தார்.

சீனாவில் பாரம்பரிய மருத்துவமும் மேற்கத்திய மருத்துவமும் ஒருங்கிணைந்த மருத்துவ முறை இருக்கிறது. அதேபோல இந்தியாவில் உள்ள சித்தா, அயூர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவ முறையும் மேற்கத்திய மருத்துவ முறையும் ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைத்தால் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நிறைய மக்கள் சிகிச்சைக்காக‌ வருவார்கள்.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையைப் பயில மலேசியாவில் இருந்து 10 மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று இங்கு வருகிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x