Last Updated : 30 Apr, 2015 11:26 AM

 

Published : 30 Apr 2015 11:26 AM
Last Updated : 30 Apr 2015 11:26 AM

பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல்: விதர்பா விவசாயிகள் உடன் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பாதயாத்திரையை மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கினார்.

அமராவதி மாவட்டத்தின் விதபார்வா பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கிறார். இந்தப் பாதயாத்திரையை 'சன்வத் பாதயாத்திரை' என காங்கிரஸ் அழைக்கிறது.

ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். சாலை வழியாக நடந்து பல கிராமங்களுக்கு செல்ல இருக்கும் ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வி அக்கட்சியைத் துவளச் செய்திருக்கிறது. அடுத்தடுத்த சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பெற்ற தோல்வி, காங்கிரஸின் அஸ்திவாரத்தையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

அக்கட்சியின் அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் ராகுல், இடைக்கால ஓய்வை முடித்துக் கொண்டு பாஜகவுக்கு எதிராக தீவிரமாகக் களமிறங்கி யிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பொதுக் கூட்டத்திலும் சரி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பட்ஜெட் தொடரில் அவர் பேசியதாகட்டும் சரி காங்கிரஸுக்கு கொஞ்சம் உற்சாகத்தை ஊட்டியிருக்கிறது.

எனவே, காங்கிரஸ் கட்சியை விவசாயிகள் மட்டத்தில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து பாதயாத்திரை செல்ல ராகுல் திட்டமிட்டது கவனிக்கத்தக்கது.

பழைய சூத்திரம்

காங்கிரஸ் துவண்டுபோன சமயங்களில் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் இதேபோன்ற மிகப்பெரிய அளவில் மக்களைச் சந்திக்கும் போராட்டங்களை நடத்தினர். 1977, 1989ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட இப்போராட்டங்கள் காங்கிரஸுக்கு நல்ல பலனையே அளித்தன. எனவே, ராகுலின் வேளாண் பாதயாத்திரை நல்ல அறுவடையைத் தரும் என காங்கிரஸ் நம்புகிறது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளின் பிரச்சினையைக் கையில் எடுத்து பெரும் பாதயாத்திரையை நடத்தினார். அது காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது.

30 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சரத் பவார், விவசாயிகளின் பிரச்சினையைக் கையிலெடுத்து 'சேத்கரி திண்டி' எனப் பெரும் போராட்டத்தை முன்னிறுத்தினார். அது அவருக்கு கைகொடுக்கவே செய்தது.

காங்கிரஸ் துவண்டபோதெல்லாம் விவசாயிகளின் பிரச்சினையைக் கையிலெடுத்து மீண்டும் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது. அதே வெற்றி சூத்திரம் தற்போதும் பலனளிக்கும் என நம்புகிறார் ராகுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x