Last Updated : 25 Feb, 2015 10:40 AM

 

Published : 25 Feb 2015 10:40 AM
Last Updated : 25 Feb 2015 10:40 AM

அன்னை தெரஸா மதப்பிரச்சாரகர்: ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் சர்ச்சை - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

அன்னை தெரஸா குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு நாடாளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இது தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. ராஜஸ் தானில் அண்மையில் தொண்டு நிறுவன நிகழ்ச்சி சேவை ஒன்றில் பேசிய மோகன் பாகவத், இங்கு செய்யப்படும் சேவை அன்னை தெரஸா இந்தியாவில் செய்ததுபோன்றது அல்ல. இது எந்த உள்நோக்கமும் இல்லாத சேவை. முன்பு நமது மக்களுக்கு அன்னை தெரஸா உதவியதன் முக்கிய நோக்கம், இந்திய மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, யாருக்கு எதிராக இப்போது கருத்து கூறப்பட்டுள்ளதோ அவர், இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்த உலகின் சொத்தாக மதிக்கப்படுபவர். அவருக்கு எதிராக கருத்து கூறியவரை நாம் எவ்வளவு கண்டித்தாலும் போதுமானதாக இருக்காது என்றார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆளுங்கட்சி பகுதியை நோக்கி அவமானம், அவமானம் என்று குரல் எழுப்பினர்.

அன்னை தெரஸா பற்றி பாஜகவின் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தலைவர் கூறிய கருத்துக்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஒரு கட்சியின் தலைவர் அல்லது அதன் பொதுச் செயலாளர் கூறிய கருத்துக்கு அரசு விளக்கமளிக்க தேவையில்லை.

அரசு என்ன கூறியுள்ளது என்பதற்கு மட்டுமே நான் விளக்கமளிக்க கடமைப்பட் டுள்ளேன் என்று பதிலளித்தார்.

பாஜக எம்.பி. ஆதரவு

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. மீனாட்சி லேகி, ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிக் கிறது. மக்களை கிறிஸ்தவ பாதைக்கு கொண்டு வருவது எனது பணி என்று அன்னை தெரஸா தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் விசுவாசியான நவீன் சாவ்லா எழுதியுள்ள புத்தகத்தை சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். அதில் அன்னை தெரஸாவின் பேட்டியை எழுதியுள்ளார். அந்த பேட்டியில், என்னை சமூக சேவகர் என்று நினைத்து பலரும் குழப்பிக் கொள்கின்றனர்.

நான் சமூக சேவகர் அல்ல. நான் இயேசுவின் சேவையில் ஈடுபட்டுள்ள நபர். கிறிஸ்தவத்தை பரப்புவதும், மக்களை கிறிஸ்தவத்துக்குள் கொண்டு வருவதும்தான் எனது பணி என்று அன்னை தெரஸா கூறியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

தவறான தகவல்

அன்னை தெரஸா உருவாக்கிய மிஷனெரிஸ் ஆப் சேரிட்டி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார் இந்த சர்ச்சை குறித்து கூறுகையில்,

அன்னை தெரஸா உருவாக்கிய அமைப்பு மதமாற்றம் செய்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவருக்கு யாரோ தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.

அன்னை தெரஸா இருந்தபோது கூட இப்படி ஒரு சர்ச்சை எழுந்தது இல்லை. எந்த ஆதாயமும் தேடாமல் ஏழைகளுக்கு உதவுவது தான் எங்கள் நோக்கம். எங்கள் அமைப்பில் இந்துக்கள் இந்துக் களாகவும், முஸ்லிம்கள் முஸ்லிம் களாகவும்தான் உள்ளார்கள். நான் கூட சீக்கிய பெண்தான் என்று அவர் கூறினார்.

கேஜ்ரிவால் கருத்து

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், நான் அன்னை தெரஸாவுடன் சில காலம் பணியாற்றியுள்ளேன். அவர் தூய உள்ளம் படைத்தவர். அவரது புகழை பரப்புங்கள் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x