Last Updated : 05 Jul, 2016 07:12 AM

 

Published : 05 Jul 2016 07:12 AM
Last Updated : 05 Jul 2016 07:12 AM

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 9 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலித் சமுதாயத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் முதன்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்போது 2-வது முறையாக மாற்றம் செய்யப்பட உள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சர்வானந்த சோனோவால் சமீபத்தில் அசாம் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து, இந்தத் துறை காலியாக உள்ளது. மேலும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்று கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. குறிப்பாக, அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கும் தலித் சமுதாயத்தினருக்கும் அதிக முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதேநேரம் சில அமைச்சர்களின் துறை மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசின் முதன்மை செய்தித்தொடர்பாளர் பிராங்க் நொரோன்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், “செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு அமைச் சரவை விரிவாக்கம் செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

விரிவாக்கத்தின்போது, 9 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.அலுவாலியா, விஜய் கோயல், மகேந்திரநாத் பாண்டே, அர்ஜுன் ராம் மேக்வால், கிருஷ்ணராஜ், பி.பி.சவுத்ரி, அஜய் தம்டா, புருஷோத்தம் ருபாலா, ஆர்பிஐ கட்சி எம்.பி. ராம்தாஸ் அத்வாலே, அப்னா தளம் கட்சி எம்.பி. அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை நேற்று சந்தித்துப் பேசினர்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா (76) மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா (75) ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப் படலாம் என கூறப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களை அமைச்சரவையில் சேர்ப்பதில்லை என்பது மோடியின் எழுதப் படாத விதியாக உள்ளது குறிப்பிடத் தக்கது.

இப்போது, மத்திய அமைச்சரவையில் பிரதமர் உட்பட மொத்தம் 64 அமைச்சர்கள் உள்ளனர். அரசியலமைப்பு சட்டத் தின்படி அதிகபட்சமாக 82 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x