Last Updated : 01 Feb, 2017 07:12 PM

 

Published : 01 Feb 2017 07:12 PM
Last Updated : 01 Feb 2017 07:12 PM

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளோ இந்தியாவில், செலுத்தும் அபராதமோ அயல்நாடுகளில்

பிரிட்டன் எஞ்ஜினியரிங் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் சமீபத்தில் இந்தியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து, நைஜீர்யா, மலேசியா ஆகிய நாடுகளில் செய்த நிதிமுறைகேடுகளுக்கு அங்கு ரூ.5,500 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி 6-ம் தேதி தற்போது காட்பரி சாக்லேட் நிறுவனத்தை ஒரு பகுதியாக இணைத்துக்கொண்ட, முன்பு கிராஃப்ட் புட்ஸ் என்று அழைக்கப்பட்ட தற்போது மோண்டலேஸ் என்று அழைக்கப்படும் நிறுவனம் 13 மில்லியன் டாலர்கள் அமெரிக்காவிடம் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டது.

காரணம் என்னவெனில், இந்திய தரகர் ஒருவருக்கு இந்நிறுவனம் லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்தது, இந்தத் தரகர் இமாச்சலில் உள்ள பட்டியில் சாக்கலேட் பாக்டரி தொடங்குவதற்கு 30 வேறுபட்ட உரிமங்களைப் பெற்றுத்தர பல்வேறு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த லஞ்சத்தை அந்நிறுவனம் வழங்கியது தெரியவந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளிடத்தில் 13 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

முறைகேடுகள், ஊழல்கள் செய்வது ஒரு நாட்டில் அதனை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்துவது வேறு நாட்டில்..

செப்டம்பர் 2016-ல் ஆன்ஹியூஸர்-புஷ் இன்பெவ் என்ற நிறுவனம் தனது இந்திய நிறுவனத்தின் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை சரிகட்ட 6 மில்லியன் டாலர்கள் கட்டியுள்ளது. வேடிக்கை என்னவெனில் இந்த இந்திய நிறுவனம் ஒரு ஊழியரை வேலைக்கு எடுக்க முயன்றது, ஆனால் இவர் இந்நிறுவனத்தின் தகிடுதத்தங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் அம்பலப்படுத்தினார். அதாவது இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க 3-ம் நபர்களை இந்த நிறுவனம் பயன்படுத்தியது இவர் மூலம் தெரியவந்தது.

2012-ம் ஆண்டு இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட முறைகேடுகள் செய்ததற்காக ஆரக்கிள் நிறுவனம் 2012-ல் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் சிவில் அபராதம் செலுத்தியது.

அமெரிக்காவின் அயல்நாட்டு ஊழல் செயல்பாடுகள் சட்டம் என்பதை அமெரிக்க நிறுவனங்கள் மீறுவதும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் முறைகேடுகளில் ஈடுபட்டு அபராதம் கட்டுவதும் வழக்கமாகி வருகின்றன. அதாவது அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது முதல் தவறான கணக்குப் பதிவேடு பராமரிப்பு நடவடிக்கைகள் வரை இந்த லஞ்ச நடவடிக்கை ஊடுருவியுள்ளது. பிரிட்டனிலும் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம் போல் அவ்வப்போது இந்த விவகாரம் எழாமலில்லை.

அதாவது வேறொருவருக்கு லஞ்சம் கொடுக்க இன்னொருவரிடம் திருடுவது என்பது போன்ற சூழல் நிலவுகிறது. ஒரு ஆக்ரோஷமான உலக நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைகிறது, அரசு எந்திரங்களைக் கட்டிக்காக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுக்க தரகர்களை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து லாபங்களை குவித்து வருகின்றன. ஆனால் தங்கள் நாடுகளில் பிடிபடும்போது ‘தவறை’ உணர்வதாக கூறிவிட்டு குற்ற நடவடிக்கையிலிருந்தும், நீண்ட சிறைத் தண்டனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றன. இது அனைத்தும் அவர்கள் நாட்டில் நடைபெறுகிறது, ஆனால் பாதிக்கப்படுவதோ இந்தியா!

நேர்மையாக சம்பாதிக்கும் இந்தியர் ஒருவர் இத்தகைய ஊழல் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதற்கு நியாயமான சந்தை விலையை விட அதிகம் செலவிடுவதற்குக் காரணம் இத்தகைய நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அளிக்கும் பெரிய அளவிலான் லஞ்சமே காரணம்.

இந்தியாவிலிருந்துதான் அயல்நாடுகள் மிகப்பெரிய அளவில் லாபங்களை குவிக்கின்றன, இந்நிலையில் முறைகேடுகளுக்காக தங்கள் நாட்டில் பிடிபட்டு அபராதம் செலுத்தும் தொகையில் நேர்மையாக சம்பாதிக்கும் இந்தியர்களின் பணமும் அடங்கியுள்ளதுதான் இதில் வேதனை கலந்த அம்சம்.

இதில் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில் இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான நம் அரசுகளின் அணுகுமுறையே. வளரும் நாடுகளின் ஊழலுக்கு எதிரான சட்டங்களில் சிக்குவோர்கள் கட்டும் இத்தகைய அபராதங்களில் இந்தியாவுக்கு ஒரு தொகையை அளிக்கும் நடைமுறை இருக்கிறதா என்பது தெரியவில்லை.

அமெரிக்காவில் இந்தச் சட்டம் நீண்ட காலமாக இருந்து வருகிறது, இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு அபராதம் கட்டும் நிறுவனங்களைப் பற்றி இந்தியா கண்டு கொண்டு நம் நாட்டில் இதன் ஊழல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை காக்க மத்திய அரசு ஏதாவது செய்கிறதா என்பது கேள்வியே.

நாட்டின் புலனாய்வு கழகங்களான சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மற்ற நாடுகளின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தகைய நிறுவனங்களின் இந்திய வர்த்தக நடைமுறைகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதும் கேள்வியே.

வரும் ஆட்சியாளர்களெல்லாம் ஊழல் ஒழிப்பு பாந்தவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு மக்களின் வாக்குகளைப் பெறுகின்றனரே தவிர இத்தகைய கார்ப்பரேட்-தரகர்கள்-அரசு ஊழியர்கள் நெட்வொர்க் மீது சரியான ஊழல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். மிகவும் உயர்மட்டத்தில் இத்தகைய ஊழல் முதலைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைக்கும் நேரடி தொடர்பு உள்ளது.

ஊழல் தடுப்பு அமைப்புகளின் தனிச்செயல்பாட்டு சுதந்திரம் பற்றியதோ அல்லது நீண்ட நிலுவையில் உள்ள லோக்பால் சட்டம் பற்றியதோ இது அல்ல. இது திறமை மற்றும் பொறுப்பு பற்றிய விவகாரமாகியுள்ளது. இந்திய ஊழல் தடுப்பு அமைப்புகள் உலகம் நெடுகிலும் கிடைக்கும் டிஜிட்டல் தரவுகளை சரியாகக் கையாண்டு, ஊழல்களை அம்பலப்படுத்துவோர்களை ஊக்குவித்து சட்டத்தை பாரபட்சமில்லாமல் அமைக்க வேண்டும் என்பதே இப்போதைய அவசரத் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x