Last Updated : 30 Nov, 2014 02:42 PM

 

Published : 30 Nov 2014 02:42 PM
Last Updated : 30 Nov 2014 02:42 PM

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உளவு அமைப்பை பலப்படுத்த வேண்டும்: காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தல்

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதங்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் உளவுத் தகவல் சேகரிப்பை பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

அசாம் மாநிலம் குவாஹாட்டி யில் உளவுத் துறை (ஐபி) சார்பில் நடைபெற்ற 49-வது காவல் துறை தலைவர்கள் மாநாட்டின் 2-வது நாளான நேற்று மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது ஆயுதங்களை நம்பி இருக்கக் கூடாது. அதாவது நம்மிடம் எவ்வளவு ஆயுதங்கள் இருக்கின்றன, எத்தனை பேர் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக உளவுத் தகவல் திரட்டுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சாணக்கியர் கூறியுள்ளார்.

நம்மிடம் உள்ள ஆயுதங்களைவிட உளவுத் துறை வலிமையாக இருந்தால், ஆயுதம் ஏந்திய வீரர்கள் மற்றும் ஆயுதப் பயன்பாடு என்பது பின்னுக்குத் தள்ளப்படும். சிறந்த உளவுத் துறையைக் கொண்ட நாடுதான் வலிமையானதாக விளங்க முடியும். எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உளவுத் துறையை பலப்படுத்த வேண்டியது அவசியம்.

‘ஸ்மார்ட்’ போலீஸ்

நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை திறமையாக கையாளக் கூடிய படைதான் இப்போதைய தேவையாக உள்ளது. காவல் துறையின் சேவை சிறந்து விளங்கவும், பணி கலாச்சாரம் மற்றும் தங்களது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும் ஸ்மார்ட் (SMART) கொள்கையை கடைப் பிடிக்க வேண்டும்.

அதாவது, கடுமையாக அதேநேரம் உணர்வுப்பூர்வமாக (Strict and Sensitive), நவீன, எளிதில் அணுகக்கூடிய (Modern and Mobile), விழிப்புடனும் பொறுப் புடனும் (Alert and Accountable), நம்பகத்தன்மையுடனும் தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும் (Reliable and Responsive) மற்றும் தொழில்நுட்ப அறிவுடனும் பயிற்சி திறமையுடனும் (Techno-savvy and Trained) காவல் துறையினர் செயல்பட வேண்டும்.

பணியின்போது 33,000 பேர் பலி

நாடு சுதந்திரம் அடைந்ததி லிருந்து இதுவரை காவல் துறையைச் சேர்ந்த 33 ஆயிரம் பேர் பணியின்போது வீர மரணம் அடைந்துள்ளனர். இது சிறிய விஷயம் அல்ல. நாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் தங்களது உயிரை தியாகம் செய்த அவர்களை நாம் கவுரவிக்க வேண்டும். ஆனால் இவர்களைப் பற்றிய விவரம் போலீஸாருக்கே தெரியாது.

ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும் போலீஸ் அகாடெமி, காவலர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பதுடன் நின்றுவிடாமல், பணியின்போது உயிரிழந்தவர்களைப் பற்றிய விவரம் அடங்கிய புத்தகத்தை பயிற்சிக்கான பாடதிட்டத்தில் கட்டாயமாக சேர்க்க வேண்டும். இது பயிற்சி பெறும் காவலர்களுக்கு ஊக்கமளிப்ப தாக அமையும். மேலும் காவல் துறை ஆண்டு விழாவின்போது, பணியின்போது இறந்தவர்களின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் அடங்கிய மலரையும் வெளியிடலாம்.

நலத் திட்டங்கள் அவசியம்

காவல் துறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை மிகவும் பதற்றமானது. எனவே, அவர்களது குடும்பத்தில் அமைதி நிலவவில்லை எனில், அவர்களால் தங்களது பணியில் சிறப்பாக ஈடுபட முடியாது. எனவே, அவர்களது குடும்பத்தினரின் உடல்நலம், குழந்தைகளின் கல்வி, குடியிருப்பு உள்ளிட்ட தேவைகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

திரைப்படங்களில் மோசமாக சித்தரிப்பதா?

திரைப்படங்களில் காவல் துறையினரைப் பற்றி மோசமாக சித்தரிக்கப்படுகின்றன. இதனால் காவல் துறையினரை பொதுமக்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. இது தவறு. இத்துறையில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதை மட்டுமே அழுத்தமாக பதிவு செய்வதை விடுத்து, காவல் துறையின் நல்ல செயல்களை எடுத்துச் சொல்வதன் மூலம், அந்தக் குறைகளைப் போக்க வேண்டியது திரைத் துறையினரின் கடமை.

அதேபோல், காவல் துறையின் நிறைகள் குறித்த ஆயிரக்கணக் கான செய்திகள் இருக்கும்போது, குறைகளுக்கு மட்டுமே முக்கியத் துவம் கொடுக்கும் போக்கை ஊடகங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் உள்ளது போல ஒவ்வொரு காவல் நிலைய மும் தனியாக இணையதளங்களை உருவாக்கி அதில் தாங்கள் செய்த பணிகளை தெரியப்படுத்த வேண்டும். மேலும், காவல் துறை யின் மூலம் பயனடைந்தவர்களின் கதையை அதில் வெளியிட வேண்டும். இதனால் காவல் துறையைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

வங்கதேசத்துடன் நில பரிமாற்ற ஒப்பந்தம்

பாஜக சார்பில் குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "அசாம் மக்களின் பிரச்சினையை நன்கு அறிவேன். மாநில மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என உறுதி கூறுகிறேன். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் குடியேறுவதை நிரந்தரமாக தடுப்பதற்காக அந்த நாட்டுடன் நில பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x