Last Updated : 06 Nov, 2014 03:09 PM

 

Published : 06 Nov 2014 03:09 PM
Last Updated : 06 Nov 2014 03:09 PM

உள்நாட்டில் பெரிய தாக்குதல்களை நடத்த இந்திய தீவிரவாதிகளுக்கு அல்-காய்தா பயிற்சி



இந்தியன் முஜாகுதீன் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் அல்-காய்தா, நாட்டில் மிகப் பெரிய தாக்குதல் நடத்துவதற்கான கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், இந்தியாவில் மிகப் பெரிய அளவிலான தாக்குதல் நடத்த உள்நாட்டு தீவிரவாதிகளுக்கு அல்-காய்தா பயிற்சி அளித்து வருவதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து உளவுத்துறை தலைமை அதிகாரி ஷரத் குமார் கூறும்போது, "சிரியா, இராக்கில் தாக்குதல்கள் என்பது தொடர்கதையாகிவிட்டது போல, இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களை பிணைக் கைதிகளாக்கி அவர்கள் (அல்-காய்தா) தங்களது திட்டத்தை நிறைவேற்ற நினைக்கின்றனர்.

ஐ.எஸ்.ஸுடன் இவர்கள் தற்போது இணக்கமான செல்ல முயற்சிப்பதும், பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுதான். தற்போது எந்த வகையில் உள்நாட்டு பயங்கரவாதிகளுடன் அல்-காய்தா மற்றும் ஐ.எஸ். கூட்டு சேருகிறது என்பதுதான் கவனத்துடன் நோக்க வேண்டியது. இவர்களது சதிகள் அனைத்தும் ஆப்கானில் திட்டமிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்றார்.

இந்திய துணை கண்டத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக தெற்கு ஆசிய பகுதியில் அல்-காய்தா அமைப்பின் கிளை தொடங்கப்படும் என்று முன்னதாக அந்த அமைப்பு தகவல் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு உளவுத்துறை பல முறை எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. கொல்கத்தா கடற்படை தளத்துக்கு கடல் வழியிலான அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த வாரம் வந்த தகவலை அடுத்து, இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் இணையத்தின் வழியாக தொடர்பில் இருந்து வருவதும், அவர்கள் உள்நாட்டுத் தீவிரவாதிகளுக்கு கட்டளைகளை இட்டு வருவதையும் மத்திய அரசிடம் உளவுத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x