Last Updated : 10 Jun, 2016 03:17 PM

 

Published : 10 Jun 2016 03:17 PM
Last Updated : 10 Jun 2016 03:17 PM

பிறக்காத மழலையின் மடல்- குஜராத் முதல்வரை கலங்கவைத்த 9-ம் வகுப்பு மாணவியின் பேச்சு

பெண் சிசுக் கொலை பிரச்சினையை முன்னிறுத்தி 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசியதைக் கேட்டு குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் கண்ணீர் சிந்தினார்.

குஜராத் மாநிலத்தில் கல்வி கற்போர் விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அம்மாநில அரசு சார்பில் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது.

அந்த வகையில் கேதா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஆனந்திபென் படேல் நேரடியாகக் கலந்து கொண்டார். முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஹரேஜ் துவக்கப் பள்ளி மாணவி அம்பிகா கோஹெல், 'பிறக்காத மழலையின் மடல்' என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை வாசித்தார். பெண் சிசுக் கொலை பிரச்சினையை முன்னிறுத்தி அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை வாசித்த அம்பிகா, "அம்மா, நான் இந்த உலகைப் பார்க்க விரும்பினேன். புது காற்றை சுவாசிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. உன் கருவில் இருந்த நான் ஒரு பெண் சிசு எனத் தெரிந்து கொண்டதாலேயே நீ என்னை கொலை செய்துவிட்டாய். இவ்வுலகில் பிரவேசிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாமலையே சவமாக்கப்படும் வேதனை மிகவும் கொடியது. அம்மா. நீ ஒன்றை தெரிந்துகொள் பெண் குழந்தை இல்லாத எந்த ஒரு இல்லமும் முழுமை பெறுவதில்லை" எனக் கூறி முடித்தார்.

அப்போது அங்கே கூடியிருந்தவர்களில் பெரும்பாலோனோ கண்ணீர் சிந்தினர். முதல்வர் ஆனந்திபென் படேலும் கண்ணீரை தனது கைக்குட்டையால் துடைத்தார்.

பின்னர் மாணவி அம்பிகாவை அருகில் அழைத்து ஆரத்தழுவி பாராட்டினார். பின்னர் பேசிய முதல்வர் ஆனந்தி, பிள்ளைகளில் ஆண் - பெண் பேதம் பார்க்கக்கூடாது. பெண் பிள்ளைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x