Last Updated : 16 May, 2017 09:08 AM

 

Published : 16 May 2017 09:08 AM
Last Updated : 16 May 2017 09:08 AM

குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரம்: சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார் மம்தா

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் சந்தித்து பேசுகிறார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடை கிறது. அடுத்த குடியரசுத் தலைவ ராக, பாரதிய ஜனதா தமது தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தேர்வுசெய்ய முயன்று வருகிறது. அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களில் பெரும்பாலா னோர் இதற்கு ஆதரவளித்து வருகின்றனர். சிவசேனா மட்டும் வெளிப்படையாக தனது சம்மதத்தை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆர்எஸ்எஸ் தலைவர் நிறுத்தப்பட்டால், அதை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் வேகமாகத் தயாராகி வருகின்றன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசி, ஒன்றிணைத்து வருகிறார். இந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அவர் டெல்லியில் இன்று பேச்சு நடத்தவுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தல் பெயரில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 2019 மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதே முக்கிய நோக்கம். இதற்காக எதிர்க்கட்சிகளில் சிலவற்றுடன் இருக்கும் மனக்கசப்பை ஒதுக்கிவிட்டு அவற்றுடன் சோனியா பேச்சு நடத்தி வருகிறார். இந்த வார இறுதிக்குள் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மஹாஜன் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப் பட்டால் தாம் ஆதரிப்பதாக ஏற்கெனவே மம்தா அறிவித்தார். ஆனால் இந்த மூவரில் ஒருவரை பாஜக நிறுத்த வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில், மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவைப் பெற அர்விந்த் கேஜ்ரிவாலிடம் அவருக்கு நெருக்கமான மம்தா மூலம் பேச்சு நடத்த சோனியா திட்டமிட்டுள்ளார். மம்தாவை அடுத்து திமுக தலைவர் மு.கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் சோனியா விரைவில் சந்தித்து பேச உள்ளார். பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, அதிமுக ஆகிய கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதில் அதிமுகவில் யாரிடம் பேசுவது என்ற குழப்பம் காங்கிரஸில் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x