Published : 23 May 2017 06:14 PM
Last Updated : 23 May 2017 06:14 PM

சர்ச்சை சாமியார் சந்திராசாமி காலமானார்

பிரபல சாமியார் சந்திராசாமி சிறுநீரக செயலிழப்பால் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

ஆன்மிகத் தலைவர் ஜெகதாச்சார்யா சந்திராசாமியின் இயற்பெயர் நேமி சந்த். இவர் ஜோதிடராகப் புகழ்பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று ஜெயின் கமிஷன் அறிக்கையில் சந்திராசாமியை குறிப்பிட்டனர்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருக்கு சந்திராசாமி நெருக்கமானவராக இருந்தார். சந்திராசாமி மீது நிதி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்தன. லண்டன் தொழிலதிபரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் 1996-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக பல குற்றச்சாட்டுகள் இவர்மீது இருந்தன.

இந்நிலையில், சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த சந்திராசாமி இன்று டெல்லியில் காலமானார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் பெங்களூரு ரங்கநாத். ராஜீவ் காந்தியை படுகொலை செய்து தப்பியோடிய சிவராசன் குழுவினருக்கு அடைக்கலம் தந்தவர் ரங்கநாத்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி உள்ளிட்டோருக்கு இருந்த தொடர்பை சோனியாவிடம் விவரித்திருக்கிறார். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதுகூட ரங்கநாத்தின் புகார் குறித்து விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி குறித்த புதிர்களும் மர்மங்களும் மறையாத நிலையில் ரங்கநாத் கடந்த ஜனவரி மாதத்தில் மறைந்துவிட்டார். தற்போது சந்திரசாமியும் மறைந்துவிட்டார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x