Published : 07 Oct 2015 03:21 PM
Last Updated : 07 Oct 2015 03:21 PM

நயன்தாரா சேகல் வழியில் சாகித்ய அகாடமி விருதை உதறினார் கவிஞர் அசோக் வாஜ்பேயி

மத்திய அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, இந்தி கவிஞர் அசோக் வாஜ்பேயி சாகித்ய அகாடமி விருதை அரசிடம் திரும்பி அளித்தார்.

நேருவின் உறவினரும், 1986 சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சேகல் தனது சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்ததையடுத்து, தற்போது கவிஞர் அசோக் வாஜ்பேயி தனது சாகித்ய விருதை திருப்பி கொடுத்தார்.

இது குறித்து அசோக் வாஜ்பேயி கூறும்போது, “எழுத்தாளர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதி காண்பிக்க இதுவே சிறந்த தருணம். எழுத்தாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது, சமீபமாக இவர்கள் கொலை செய்யவும் படுகின்றனர்.

எனவே இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க எழுத்தாளர்களுக்கு இதுவே சரியான தருணம். லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திழுக்கும் நாவன்மை படைத்த பிரதமர் நமக்கு வாய்த்துள்ளார். ஆனால் இங்கோ, எழுத்தாளர்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். அவரது அமைச்சரவை சகாக்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவர் இன்னமும் மவுனம் சாதித்து வருகிறார். ஏன் அவர்கள் வாயை அவர் அடைக்கவில்லை?

நாட்டின் பன்முகப் பண்பாட்டுத் தன்மை பாதுகாக்கப்படும் என்று பிரதமர் மோடி இன்னும் ஏன் கூறவில்லை? அவ்வப்போது இதனை சகித்துக் கொள்ள முடியாது, அதனை சகித்துக் கொள்ள முடியாது, பொறுத்துக் கொள்ள முடியாது என்று அரசு அறிவிப்பு மேல் அறிவிப்பாக வெளியிட்டு வந்தாலும், சகிப்புத் தன்மை இருந்திருந்தால் இந்த மாபாதகச் செயல்கள் ஏன் நடைபெறுகின்றன.”

இவ்வாறு அவர் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x