Last Updated : 22 Aug, 2016 02:07 PM

 

Published : 22 Aug 2016 02:07 PM
Last Updated : 22 Aug 2016 02:07 PM

காஷ்மீர் பிரச்சினை: மோடியுடன் ஒமர் தலைமையில் எதிர்க்கட்சியினர் சந்திப்பு

காஷ்மீர் பிரச்சனையில் மோடி தலையிட்டு, பெல்லட் துப்பாக்கிகள் மீது உடனடித் தடை விதித்து மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என்று நேரில் வலியுறுத்தல்.

காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து, அரசியல் தீர்வுக்கு வழிவகை செய்ய வலியுறுத்தி காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவினர் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

டெல்லியில் நடந்த சந்திப்பில், காஷ்மீர் பிரச்சனையில் மோடி தலையிட்டு, பெல்லட் துப்பாக்கிகள் மீது உடனடித் தடை விதித்து காஷ்மீரில் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் மிர் தலைமையில் ஏழு காங்கிரஸ் உறுப்பினர்கள் கொண்ட குழுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. தாரிகாமி, மாகாண தலைவர்கள் நாசிர் வானி மற்றும் தேவிந்தர் ராணா தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினரும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் டெல்லி வந்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று குடியரசுத் தலைவர் பிரணாப்பை சந்தித்து காஷ்மீரில் பிரச்சினை ஓயாத நிலையில், இதில் அவர் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இன்று பிரதமர் மோடியைச் சந்தித்த எதிர்க்கட்சிக் குழுவினர் காஷ்மீர் நிலவரம் குறித்து மனு அளித்தனர். அதில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் படும் வேதனை குறித்தும், உயிரழந்தவர்கள் பற்றிய தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு நிலைமையைச் சரிசெய்யும் வகையில் அரசு, எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்காதது குறித்தும் வேதனை தெரிவித்துள்ளது.

மேலும் அதில், 'மெஹ்பூபா முஃப்தி தலைமையிலான பிடிபி - பாஜக அரசு இளைஞர்கள் மத்தியில் அமைதியை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்து விட்டது. இதற்கு மேலும் மத்திய அரசு ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

காஷ்மீரின் நிலையைச் சரிசெய்யாமல் தொடந்து அமைதி காத்தால், அது இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இதுகுறித்து பிரதமர் உடனடி நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்து, ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x