Last Updated : 03 Jan, 2016 11:48 AM

 

Published : 03 Jan 2016 11:48 AM
Last Updated : 03 Jan 2016 11:48 AM

கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு கடல் விமானம், ஹெலிகாப்டர் சேவை

நீர் பரப்பில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் வசதி கொண்ட கடல் விமான சேவையை சுற்றுலாப் பயணிகளுக்கு கோவா அரசு விரைவில் அளிக்கவுள்ளது.

இது தவிர நிலத்திலும் நீரிலும் செல்லக்கூடிய வாகன வசதி மற்றும் ஹெலிகாப்டர் சேவையையும் அம்மாநில அரசு வழங்கவுள்ளது.

இதன் மூலம் கோவாவுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை இந்த ஆண்டு 75 லட்சமாக உயரும் என அரசு எதிர்பார்க்கிறது.

இதுகுறித்து மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலீப் பருலேகர் கூறியதாவது:

கோவாவில் கடல் விமான சேவை வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த மெஹ்ஏர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். வாஸ்கோவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பல்வேறு நதிகளுக்கு கடல் விமானங்களை இந்த நிறுவனம் இயக்கும். இதில் முதல்கட்டமாக மண்டோவி, சப்போரா நதிகளுக்கு இந்த சேவை தொடங்குகிறது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

15-ம் தேதி சேவை

இதுபோல் டபோலிம் விமான நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஹெலிகாப்டர்களை இயக்க பவன் ஹன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி இந்த சேவை தொடங்கும்.

நிலத்திலும் நீரிலும் செல்லக்கூடிய 4 பஸ்களை சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் அனுமதிக்குப் பிறகு இதன் சேவை தொடங்கும். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.

கடந்த ஆண்டு கோவாவுக்கு 65 லட்சம் பேர் சுற்றுலா வந்தனர். இந்நிலையில் புதிய வசதிகள் காரணமாக இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கி றோம்.

இவ்வாறு அமைச்சர் திலீப் பருலேகர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x