Published : 01 Apr 2017 09:30 AM
Last Updated : 01 Apr 2017 09:30 AM

காலஅவகாசம் வழங்க மறுப்பு: தேசிய, மாநில நெடுஞ்சாலையில் மதுக் கடைகளை உடனே மூட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய, மாநில நெடுஞ்சாலை களில் செயல்படும் மதுக் கடை கள், பார்கள், பப்புகள் மற்றும் ஓட்டல் பார்கள் மார்ச்31-ம் தேதிக்குப் பிறகு செயல்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

‘இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர். பெரும் பாலான விபத்துகளுக்கு மது போதையே முக்கிய காரணமாக உள்ளது. எனவே தேசிய நெடுஞ் சாலைகள், மாநில நெடுஞ்சாலை களில் செயல்படும் மதுபானக் கடைகளை மூட வேண்டும்’ என்று ‘அரைவ் சேப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக் கடைகளை 2017 மார்ச் 31-ம் தேதிக்குள் மூடவேண்டும். நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்று கடந்த டிசம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டது.

பப்புகளுக்கு பொருந்தும்

இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும், 500 மீட்டர் தொலைவை 100 மீட்டராக குறைக்க வேண்டும் என்று தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் சந்திரசூட், எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் கூறியிருப்பதாவது:

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் செயல்படும் மதுக் கடைகள், பார்கள் ஏற்கெனவே உத்தரவிட்ட படி மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு செயல்படக்கூடாது. இந்த உத்தரவு ஹோட்டல்களில் இயங்கும் பார்கள் மற்றும் பப்புகளுக்கும் பொருந்தும்.

எனினும் தெலங்கானா, ஆந்திராவில் மதுக் கடைகளின் உரிமம் ஏப்ரலுக்கு பிறகும் நீடிக்கிறது. அந்த கடைகள் மட்டும் செப்டம்பர் 30-ம் தேதி வரை செயல்படலாம். அதன்பிறகு கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

சிறிய நகரங்களுக்கு தளர்வு

நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் மதுக்கடைகள், பார்கள், பப்புகள், ஓட்டல் பார்கள் செயல்படக்கூடாது. எனினும் 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் மட்டும் இந்த தொலைவு 220 மீட்டராக குறைக்கப்படுகிறது.

சிக்கிம், மேகாலயா ஆகியவை மலைப்பிரதேசங்கள் என்ப தால் அந்த மாநிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் 500 மீட்டர் என்பதை 100 மீட்டராக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x