Last Updated : 15 Dec, 2015 05:55 PM

 

Published : 15 Dec 2015 05:55 PM
Last Updated : 15 Dec 2015 05:55 PM

கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தவில்லை: மாநிலங்களவையில் ஜேட்லி விளக்கம்

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெறவில்லை என்றும், அவரது அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னதான ஊழல் புகார் தொடர்பாக அரசு அதிகாரி அலுவலகத்தில்தான் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளிகளுக்கிடையே அருண் ஜேட்லி கூறும்போது, “முதல்வர் அலுவலகம் சோதனையிடப்படவில்லை. இந்த சோதனை அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்புடையதல்ல. அல்லது அவரது ஆட்சிக்காலத்துக்கு தொடர்புடையதல்ல. டெல்லி அரசு அதிகாரி மீது ஊழல் புகார் இருந்தது. இந்த சோதனை அந்த அதிகாரி தொடர்புடையதே. அந்த அதிகாரியின் அலுவலகத்திலேயே சிபிஐ சோதனை நடைபெற்றுள்ளது” என்றார்.

எதிர்க்கட்சியினர் சிபிஐ சோதனை தொடர்பாக மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

அதாவது “கூட்டாட்சி அமைப்பின் மீது தாக்குதல்”, "அறிவிக்கப்படாத அவசரநிலை" என்று எதிர்க்கட்சியினர் கடும் கூச்சலிட்டனர்.

முன்னதாக வெங்கைய நாயுடு கூறும்போது, “மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதே டெல்லி முதல்வரின் வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஒவ்வொரு விவகாரத்திலும் பிரதமர் பெயரை இழுப்பதும் ஒரு மோஸ்தராக உள்ளது. அரசின் கீழ் சிபிஐ இல்லை. காங்கிரஸ் காலக்கட்டம் போல் சிபிஐ அரசின் பிடியில் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி சிபிஐ-யை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் அரசாகும்” என்றார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “சிபிஐ சோதனை குறித்த அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்துகள் அராஜகமானவை. நம்பத்தகுந்த புகார்களின் அடிப்படையிலேயே சிபிஐ செயல்பட்டு வருகிறது. கேஜ்ரிவால் ஊழலை பாதுகாக்கிறார்.

அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதை விடுத்து உடனே பிரதமரைத் தாக்கி பேசுகிறார். இது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இந்த விஷயத்தில் கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு அம்பலமாகிவிட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x