Last Updated : 20 Jun, 2016 09:12 AM

 

Published : 20 Jun 2016 09:12 AM
Last Updated : 20 Jun 2016 09:12 AM

அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இடம்பெற சீனா எதிர்க்கவில்லை: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

அணுசக்தி விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பின ராவதை சீனா எதிர்க்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் 2 ஆண்டு சாதனை களை விளக்குவதற்காக, சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:

என்எஸ்ஜியில் உறுப்பினரா வதை சீனா எதிர்க்கவில்லை. 48 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில் புதிய உறுப்பினரை சேர்ப்பது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிதான் சீனா சுட்டிக்காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவை சமாதானப்படுத்தி அதன் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்.

நம் நாட்டின் எரிசக்தி கொள் கைக்கு என்எஸ்ஜியில் உறுப்பின ராக வேண்டியது அவசியம். இது தொடர்பாக 23 நாடுகளை நானே தொடர்புகொண்டு பேசினேன். ஒன்று அல்லது 2 நாடுகள் மட்டுமே கவலை தெரிவித்துள்ளன. எனினும், விரைவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, இந்த ஆண்டில் இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பினராகிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்க்கக் கோரி இந்தியா விண்ணப்பித்துள்ளது. வரும் 24-ம் தேதி சியோல் நகரில் நடைபெற உள்ள என்எஸ்ஜி கூட்டத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்பட உள்ளது. ஒரே ஒரு உறுப்பு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் புதிய உறுப்பினரை சேர்க்க முடியாது. ஆனால் சீனா உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த 16, 17-ம் தேதிகளில் முன்னறிவிப்பு ஏதுமின்றி அந்த நாட்டுக்கு சென்று வந்தார். அப்போது என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு சீனா ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜெய்சங்கர் சீனா சென்று வந்ததை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதி செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x