Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

பெண் துணைத் தூதர் கைது விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆடைகளை நீக்கி சோதனையிடப்பட்ட சம்பவத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம்தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், இந்தியாவிடம் அமெரிக்க அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் சதிச் செயல் உள்ளது. தேவயானியை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சி எடுத்துள்ளோம். அவரை அழைத்து வர முடியாவிட்டால், நான் நாடாளுமன்றத்துக்கே வரமாட்டேன் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “தேவயானி விவகாரத்தில் அமெரிக்க அரசு நடந்துகொண்டவிதம் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். பொது இடத்தில் அவரது கையில் விலங்கிட்டு காவல் நிலையத்தில் வைத்து ஆடையை அகற்றி சோதனையிட்டுள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேவயானி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை காரசாரமான விவாதம் நடைபெற்றது. எம்.பி.க்கள் பலர் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கு எதிராக தீர்மானம்

மக்களவையில் தேவயானி கைது விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது: “தேவயானி கைது செய்யப்பட்ட முறை தொடர்பாக அமெரிக்காவை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதே போன்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மத்திய அமைச்சர்கள் சரத் பவார், பிரஃபுல் படேல், எனது கட்சியை சேர்ந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் அஸம் கான் ஆகியோரையும் அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு அதிகாரிகள் அவமரியாதை செய்துள்ளனர். அமெ ரிக்காவை பார்த்து காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு பயப்படுவதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், “தேவயானியை கைது செய்ததை கண்டிக்கிறோம். இதே போன்று முன்னாள் தூதர் மீரா சங்கரும் அமெரிக்க அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள டோகோ போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை. அந்நாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மாலுமி சுனில் ஜேம்ஸை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசால் முடியவில்லை. உயிரிழந்த அவரின் 11 மாதக் குழந்தையின் உடலை பதப்படுத்தி வைத்துள்ள உறவினர்கள், ஜேம்ஸ் வந்த பின் இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர். வெளிநாடுகளின் நெருக்குதலுக்கு இந்தியா அடிபணியக்கூடாது” என்றார்.

தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்க அரசின் செயல்பாட்டை கண்டித்து ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், உறுப்பினர்கள் சஞ்சய் நிருபம் (காங்கிரஸ்), சவுகதா ராய் (திரிணமூல் காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), தம்பிதுரை (அ.தி.மு.க), தாரா சிங் சவுகான் (பகுஜன் சமாஜ்), நாகேஸ்வர ராவ் (தெலுங்கு தேசம்), தத்தாகடா சத்பதி (பிஜு ஜனதா தளம்), அனந்த் கீத் (சிவசேனை) ஆகியோர் பேசினர்.

மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்பு

மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, “இந்திய வெளியுறவுக் கொள்கைகள் குறித்து அக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வியன்னா சர்வதேச உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளுக்கு முரணாக இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது. அந்த உடன்பாட்டின்படி தூதரக அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை எடுப்பார் கைப்பிள்ளையைப் போல பிறர் கருதும்படி நமது வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறோம். அமெரிக்காவுடன் சமமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேவயானி கைது சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், “பாதிக்கப்பட்டவர் தலித் என்பதால், இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறது. இந்தப் பிரச்சினையை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அமெரிக்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கனிமொழி (திமுக), டெரெக் ஓ பிரையான் (திரிணமூல் காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.பி.திரிபாதி (தேசியவாத காங்கிரஸ்) உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x