Published : 30 Dec 2013 12:00 AM
Last Updated : 30 Dec 2013 12:00 AM

திருப்பதி புத்தாண்டு தரிசனம்: குவியும் வி.ஐ.பி. சிபாரிசு கடிதங்கள்
திணறும் தேவஸ்தான அதிகாரிகள்

ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், வி.ஐ.பி.க்களின் சிபாரிசு கடிதங்கள் குவிந்து வருவதால் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1, வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களான ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் வி.ஐ.பி.க்களின் சிபாரிசு கடிதங்கள் பேக்ஸ் மூலம் வந்து குவிந்து வண்ணம் இருக்கின்றன. மேலும் தொலைபேசி மூலமாகவும் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல முக்கிய பிரமுகர்கள், தேவஸ்தான அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

சில மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., க்கள், நீதிபதிகள் உட்பட பலதரப்பட்ட துறைகளின் வி.ஐ.பி.க்கள், குறிப்பிட்ட தினங்களில் தங்களுக்கும், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் தரிசன ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என சிபாரிசு செய்து வருகின்றனர்.

ஜனவரி 1-ம் தேதி, அதிகாலை 2 மணியில் இருந்து 6 மணி வரை மட்டுமே வி.ஐ.பி.க்களுக்கு தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மணி நேரத்தில், 4 முதல் 5 ஆயிரம் வி.ஐ.பி. குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதிகரித்து வரும் சிபாரிசுகளால் சுமார் 10,000 வி.ஐ.பி. பாஸ்களை வழங்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இதுபோன்ற முக்கிய நாட்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதிகளவு நபர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவதால், சாமானியர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இதனால் தேவஸ்தான அதிகாரிகள் இம்முறை மிகவும் கவனமாக செயல்பட உள்ளனர். பக்தர்களுக்கு மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்வதன் மூலம், சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய முடியும். எனவே, இந்த முக்கிய நாட்களில் மகா லகு தரிசன முறையை தேவஸ்தானம் அமல்படுத்த உள்ளது.

இதன்படி, துவார பாலகர்கள் வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய முடியும். மேலும் லட்டு தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

20 மணி நேரம் காத்திருப்பு

ஞாயிற்றுக்கிழமை, வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸில் 28 அறைகளில் காத்திருந்த பக்தர்கள், 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்தனர். மலைவழிப் பாதையில் நடந்து சென்ற பக்தர்கள் திவ்ய தரிசனம் மூலம் 10 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக, அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x