Published : 24 Mar 2017 04:25 PM
Last Updated : 24 Mar 2017 04:25 PM

அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்கான விதிமுறைகள் தளர்வு

பெரு நிறுவனங்கள் அரசியல் கட்சிக்கு அளிக்கும் நன்கொடைக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. தேர்தல் நிதி விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

இதன்படி, நன்கொடை வழங்கும்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்தொகையில் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த தொகையைக் கணக்குக் காட்ட வேண்டியதில்லை. அத்துடன் நிறுவன பங்குதாரர்களிடம் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி வழங்கினோம் என்று தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை.

மத்திய அரசால் நிதி மசோதா 2017-ல் திருத்தம் செய்யப்பட்டு, மக்களவையில் கடந்த புதன்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுநாள் வரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த கால 3 நிதி ஆண்டுகளின் சராசரி லாபத் தொகையில் 7.5% தொகையை மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும். அதே நேரத்தில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்களை அவர்களின் லாப நஷ்டக் கணக்கில் குறிப்பிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தற்போது நிறுவனங்கள் சட்டம் 2013-ல் திருத்தம் செய்துள்ள மத்திய அரசு, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த 7.5% லாபத் தொகை என்னும் நன்கொடை உச்ச வரம்பை நீக்கியுள்ளது. அத்துடன் எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்கத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காசோலை, வரைவோலை, இணையவழி என அரசின் கவனத்துக்கு வந்த பிறகே கார்ப்பரேட் நிறுவனங்கள், கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும்.

அரசியல் கட்சிகள் இனி ரொக்கமாக ரூ.2000 மட்டுமே நன்கொடையாகப் பெற முடியும் என்று ஏற்கெனவே நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x