Published : 09 Jan 2017 12:31 PM
Last Updated : 09 Jan 2017 12:31 PM

பணமதிப்பு நீக்கம்: மத்திய அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன?

நவம்பர் 8-ம் தேதி இரவு முதல் நாம் சாட்சியாக இருந்து வரும் பணமதிப்பு நீக்க பெருங்குழப்பத்திலிருந்து, பாடங்கள் பல கற்க வேண்டியுள்ளது. நம் வங்கிகளின் தவறான நடவடிக்கைகளையும், திறமையின்மையும் மத்திய அரசு குறைவாக மதிப்பிட்டுள்ளதோடு அதிர்ச்சிக்குள்ளான பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவதையும் அதீதமாக மதிப்பீடு செய்துள்ளது. அதாவது, இதெல்லாம் ஒன்றுமில்லை; இன்னல்கள் சிறிது காலத்திற்குத்தான். ஆனால், நீண்ட கால பயன்கள் அதிகம் இன்னபிற... இன்னபிற... போன்றவை.

டிசம்பர் 30-ம் தேதி இறுதிக்கெடு காலக்கட்டம் முதல் இன்று வரை செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய நோட்டுகளுக்கு மாற்றான புதிய நோட்டுகள் வங்கிகளின் உதவியுடனேயே சிலபல செல்வாக்கு நபர்கள் கைகளுக்குச் சட்ட விரோதமாகச் சென்ற செய்திகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாம் எதிர்கொண்டுதான் இருக்கிறோம். சாதாரண மக்களும், ஏழைகளும், தொழிலாளிகளும், நோயாளிகளும், வயது முதிர்ந்தவர்களும் இரண்டாயிரத்திற்கும் நாலாயிரத்திற்கும் வங்கி வாசலில் மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்கும் அவல வேளையில், இந்தியாவின் பணக்கார வர்க்கமும், செல்வாக்கு நிரம்பியவர்களும் தங்கள் வீட்டு வாசலில் பலகோடி ரூபாய் புதிய நோட்டுகளைப் பெற்றனர். இந்த மோசமான நடவடிக்கை வங்கி அதிகாரிகள் ஒத்துழைப்பின்றி நடக்க சாத்தியமேயல்ல.

இந்த ஒரு விவகாரமே மத்திய அரசு இன்று வரை உரிமை கோரும், ‘பணமதிப்பு நீக்கம் ஊழலை ஒழிக்கும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும்’ என்பதை பெரும் தவறான கணிப்பாக்கி வெறும் பிரச்சாரமாக்கியுள்ளது. பொதுமக்களுக்கான பணம் செல்வந்தர்களுக்கும், பணக்காரர்களுக்கும் கோடிக்கணக்கில் செல்வது போன்ற விஷயங்கள் இந்தியாவுக்குப் புதிதல்ல. சப்ளை குறைவாக இருக்கும் சரக்குகள் அல்லது பொருட்களை அதிக விலை கொடுக்கத் தயாராக இருக்கும் பதுக்கல்காரர்களுக்கு விற்று விடுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இரண்டாம் உலகப்போரின் போது உணவு இத்தகைய நிலையைச் சந்தித்தது, பிறகு இந்தியப் பொருளாதாரத்தில் சிமெண்ட் இத்தகைய நிலையை அடைந்தது, தற்போது நாம் ஒரு வளரும் பொருளாதாரம் என்று அரசு நமக்கு நினைவூட்டி வரும் காலத்தில் பணம் இந்த நிலையை எட்டியுள்ளது. அதாவது எப்போதெல்லாம் எதற்கு கிராக்கி ஏற்பட்டு மக்கள் அல்லாடுகின்றனரோ அப்போதெல்லாம் சில பணக்கார சக்திகள் எளிதாக அதில் பயனடைந்து சாமானியர்கள் அல்லல் படுவது நடந்து வருவது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இப்போது பணம் பணக்காரர்களின் புதிய சரக்காகியுள்ளது.

அதிகபட்ச ஆட்சி அதிகாரம்?

எனவே, கறுப்புப் பணத்தை ஒழிப்பதான அறைகூவல், மைக் செட், தாளவாத்தியங்களுடன் அரங்குக்கு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாடகத்தினால் பணத்திற்கே ஒரு புதிய கள்ளச் சந்தை உருவானதுதான் உண்மையில் நடந்துள்ளது. ‘அதிகபட்ச ஆட்சியதிகாரம்’ என்ற கோரிய மத்திய அரசு தனது நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது. இதில் மேலும் ஒரு துரதிர்ஷ்டமென்னவெனில் இந்த நாடகத்தில் சிக்கி வறுபட்டது மத்திய ரிசர்வ் வங்கி என்பதும் வருத்தத்திற்குரியது.

இந்த நடவடிக்கையை மத்திய ரிசர்வ் வங்கி கையாண்ட விதம் அசாதாரண திறமையின்மை என்பதோடு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நோட்டு நடவடிக்கையை பெருமிதத்துடன் அறிவிக்கும் அதே சமயத்தில் ஆர்பிஐ கவர்னர் போதிய நோட்டுகள் உள்ளன, புதிய நோட்டுகள் போதிய அளவில் அச்சடிக்கப்படும் என்று அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆர்பிஐ அதிகாரிகள் இன்று நிதிமுறைகேடுகளை ஊக்குவித்ததற்காக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்பிஐ என்பது அரசியல், ஆளும் வர்க்கத்தின் கணக்கிடுதலுக்கு அப்பாற்பட்டதாகவும், அரசு எந்திரங்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ள ஊழல் என்பதற்கு அப்பாற்பட்டதாகவுமே பொதுமக்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் இந்தப் புரிதல் தற்போது தவிடுபொடியானது. நம் நாட்டின் விலைமதிப்பற்ற நிறுவனமான ரிசர்வ் வங்கியையும் இன்னொரு அரசுத்துறை என்பதாக மாற்றியதில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு வெற்றியடைந்துள்ளது.

ஆட்சியதிகாரத்திற்கான தங்களது பொறுப்புணர்வை அங்கீகரிக்க அரசுக்கு விருப்பமில்லை எனும்போது அதன் உத்தி குறித்து நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. கறுப்புப் பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு போன்ற அரசு பிரச்சாரங்கள் பொய்த்துள்ள நிலையில், அரசு செய்தித் தொடர்பாளர்கள் பணமதிப்பு நீக்க பயன்களாக 2 விஷயங்களைக் கூறுகின்றனர். ஒன்று, வங்கிகளில் இவ்வளவு பணம் டெபாசிட்களாக குவிந்துள்ளதால் கடன் அளிப்பது அதிகரித்து, முதலீடு அதிகரிக்கும் என்பது, இரண்டாவது - பணம் அமைப்புக்குள் வந்த பிறகே நிதி நடவடிக்கைகளை அரசு தடம் காண முடியும் என்பது, இந்த 2 வாதங்களை அரசு செய்தித் தொடர்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

வங்கிகளில் பணம் பெரிய அளவுக்கு வந்துள்ளதால் கடன் அளிப்பது அதிகரிக்கும் என்பது தவறான அடிப்படையினால் எழுந்துள்ள வாதமாகும். டெபாசிட்களுக்கு-கடன்கள் என்ற விகிதம் அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச அளவிலேயே இல்லை. கடன்களுக்கான தேவை அதிகமாவதை பொறுத்தே வங்கிகளின் கடன் அளிக்கும் அளவு தீர்மானிக்கப்படும், எனவே டெபாசிட்கள் குவிந்து விட்டதால் கடன் அளிப்பது அதிகரிக்கும் என்பது முதற்படி தவறாகும். வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் கடன் அளிப்பு அதிகரிக்கும் என்றும் கூறுவதற்கில்லை. பொருளாதாரவியல் இதனை நீண்ட காலமாகவே கண்டுணர்ந்து வந்துள்ளது.

1930-களில் அமெரிக்காவில் இந்த விஷயம் கவனிக்கப்பட்டது. வட்டி விகிதம் குறைந்து, ஆனால் தனியார் முதலீடுகள் அதிகரிக்கவில்லை. ஏனெனில் கடன் வாங்குபவர்கள் இல்லை என்பதே. பொருளாதாரத்தை நிதிக்கொள்கையின் மூலம் மீட்டெடுப்பது என்பது ஒரு போதும் நிறைவேறாத காரியம் என்பதையே அமெரிக்க பொருளாதார அறிஞர் ஜான் மேனர்ட் கீன்ஸ் என்பவர் வலியுறுத்துகிறார். பணத்தை புழக்கத்தில் அதிகம் விடுவதன் மூலமே வேலையின்மையை கட்டுப்படுத்த முடியும் தனியார் துறை கடன் வாங்குதலை அதிகரிக்க முடியும், நுகர்வோர் செலவினத்தை ஈர்க்க முடியும், பொருளாதார வளர்ச்சியை தூண்ட முடியும்.

இது விரிவாக்க பணக்கொள்கையாகும், மற்றொன்று பணப்புழக்கத்தை சுருக்கும் நடவடிக்கை, இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் ஆனால் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்தும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். எனவே ஒரு பிரபல பழமொழியின் மூலம் விளக்க வேண்டுமென்றால், “நீர் இருக்கும் இடத்திற்கு நாம் குதிரையைக் கொண்டு செல்லலாம், ஆனால் நீரைக் குடிக்க வைக்க முடியாது” என்பதே. தனியார் முதலீட்டாளர்கள் முதலீட்டுச் செலவு, வட்டி விகிதம், ஆகியவற்றை தங்கள் தொழில் தரும் லாபம் ஆகியவற்றுடன் இணைத்தே ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

நவம்பர் 8-க்கு முன்னால் கூட கடன் வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. தனியார் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 2 ஆண்டுகளாகவே மந்தமாகவே இருந்து வருகிறது. 2016-ல் இருமுறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டும் வங்கிகளின் கடன் அளிப்பு பெரிய அளவில் முன்னேறவில்லை. இதனால்தான் உலக வங்கி இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சி பொதுமுதலீடு மற்றும் தனிப்பட்ட நுகர்வு ஆகியவற்றால் ஏற்பட்டது என்று கூறியது. எனவே பணமதிப்பு நீக்கத்தின் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்பாடுகள் குறித்து நிறுவனங்கள் ஒரு உடன்பாடான கருத்தை எட்டினால்தான் இப்போது வங்கிகளில் குவிந்துள்ள டெபாசிட்கள் கடன்களாக மறு சுழற்சிக்கு சென்றடைய முடியும்.

நாம் வங்கிகளின் பங்காற்றலுக்குத் திரும்புவோம். செயல்படாத சொத்துக்கள் என்று அழைக்கப்படும் வாராக்கடன் விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் கைகள் அதிகம் கறைபடுவதற்கு முன்பே கூட மல்லையா விவகாரத்தில் வங்கிகள் மோசமான முடிவை எடுத்ததே நடந்தது. எனவே ஊழல் என்பது ஒருபுறம் இருந்தாலும் வங்கிகளின் திறன் என்பது எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியான தருணத்தில் தற்போது இவ்வளவு பணம் வங்கிகளில் டெபாசிட்களாக குவிந்துள்ள நிலையில் மீண்டும் கடனை திறமையாக வங்கிகள்

கையாளுமா? கையாள முடியுமா? ஸ்டேட் வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்துள்ள தருணம், அரசு தரும் அழுத்தத்தினால் ஏற்பட்டதோ என்ற எச்சரிக்கை உணர்வை நம்மிடையே ஏற்படுத்துகிறது. தேர்தல்களுக்கு முன்னதாக பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் ‘அரசியல் வர்த்தக சுழற்சி’-யை மேற்கத்திய நாடுகள் செய்வது வழக்கம். இந்தியாவில் தேசிய வங்கிகள் என்ற சவுகரியம் அரசுக்கு உள்ளதால் தங்களது வாத்தியத்திற்கேற்ப அதனை நடனமாடச் செய்ய முடியும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 2-ம் காலக்கட்டத்தில்தான் தேசிய வங்கிகளின் மிக மோசமான கடன் அளிப்பு முடிவுகளினால் வாராக்கடன் அளவு அதிகரித்தது. தற்போது ஆர்பிஐ, வங்கிகளை இது குறித்து எச்சரிக்கும் என்று நம்புவோமாக.

இப்போதைய முன்னுரிமை என்னவெனில் மீண்டும் பணத்தை புழக்கத்தில் விடுவது, இதனை அதிவிரைவாகச் செய்வது மட்டுமே. பணமதிப்பு நீக்கத்தினால் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழ்வாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன, எனவே ஆர்பிஐ மற்றும் வங்கிகள் பணத்தட்டுப்பாட்டை உடனடியாக நீக்க வேண்டும். இது மட்டுமே இந்த ஆண்டு வங்கிகளின் நேரத்தை அதிகம் இழுத்துச் செல்லும்.

பணத்தை புழக்கத்திலிருந்து ஒழித்த நடவடிக்கை எந்த ஒரு சீரிய பொருளாதார ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதல்ல. மேலும் குறைந்த பட்ச அரசு, ஆட்சி நிர்வாகம் என்று கூறித்தான் நம் பிரதமர் வந்துள்ளார். எனவே பணத்தின் பயன்பாட்டை சந்தையின் முடிவுக்கு அவர் விட்டு விட வேண்டுமே தவிர வலுக்கட்டாய திணிப்புகள் தேவையற்றது. வரிகளை செலுத்துபவர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் விட்டு வைக்க உதவ வேண்டுமே தவிர அவர்கள் வீட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. அரசு எப்போதுமே பொறுப்புடைமை நோக்கியே செல்ல வேண்டும்.

- புலப்ரே பாலகிருஷ்ணன், ஹரியாணா மாநிலம் அசோகா பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியர்
மற்றும் ஐஐஎம், கோழிகோடு சீனியர் ஃபெலோ

தமிழில்: ஆர்.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x