Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

ஓரினச் சேர்க்கை தீர்ப்பு: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வது தொடர்பாக ஆராயப்படும் என்று மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், ப.சிதம்பரம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதில் குற்றம் ஏதுமில்லை. பரஸ்பரம் சம்மதத்துடன் தனிமையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் உறவு கொள்வது தவறில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து சமூக நல, மத அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தன.

விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அளித்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் சிலர், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். அப்போதும் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்று உச்ச நீதிமன்றம் கூறினால், அது தொடர்பாக ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம்.

நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. மற்றொரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில், எந்த முறையை கையாண்டால் விரைவாக தீர்வு கிடைக்குமோ, அதன்படி செயல்பட உள்ளோம்.

இந்த தீர்ப்பால் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 377-வது பிரிவின் கீழ் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த சட்டத்தில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே மத்திய அரசு முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, “எந்தவித முரண்பாடும் இல்லை. டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்” என்றார் கபில் சிபல்.

ப.சிதம்பரம் கருத்து

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், “ஓரினச் சேர்க்கை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தவறானது; ஏமாற்றமளிக்கிறது. தீர்ப்பை அளிப்பதற்கு முன் இப்போதுள்ள சமூக நடைமுறைகள், வாழ்வியல் மதிப்பீடுகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் வகையில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் நன்றாக ஆய்வு செய்த பின்பே, டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதை ஏற்றுக் கொண்டதால்தான், அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யவில்லை” என்றார்.

இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவில் திருத்தம் கொண்டு வர ஏன் முயற்சி எடுக்கக் கூடாது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “377-வது பிரிவை டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உள்பட்டுத்தான் அணுகியிருக்கிறது. தனிமையில் பரஸ்பர சம்மதத்துடன் மேற்கொள்ளும் ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்றுதான் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

விருப்பமின்றி கட்டாயப்படுத்தி அவ்வாறு உறவு கொள்வது குற்றம் என்பதுதான் அதன் அர்த்தம். எனவே, அத்தகைய குற்றத்தை தண்டிக்க, இப்போதுள்ள 377-வது பிரிவு அப்படியே தொடர வேண்டும். அதில் திருத்தம் ஏதும் கொண்டு வரத் தேவையில்லை என்பதுதான் எனது கருத்து.

அப்படியே திருத்தம் கொண்டு வர நினைத்தாலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அறிந்த பின்புதான் எதுவும் செய்ய முடியும். இப்போதைக்கு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அதுவரை சட்டத் திருத்தம் பற்றி விவாதிக்கத் தேவையில்லை” என்றார் ப.சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x