Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM

விவசாயிகள் முற்றுகையால் பின்வாசல் வழியாக நுழைந்த ஒடிசா முதல்வர்

ஒரு குவிண்டால் நெல்லுக்கு கூடுதலாக ரூ.500 ஊக்கத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் பிரதான வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பின்வாசல் வழியாக தலைமைச் செயலக அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நபநிர்மாண் குருஷேக் சங்கதன் (என்கேஎஸ்) அமைப்பு சார்பில், நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பைலின் புயல்

ஒடிசா மாநிலத்தை சமீபத்தில் பைலின் புயல் தாக்கியதால் வேளாண் சாகுபடிப் பயிர்கள் பெருத்த சேதத்துக்கு உள்ளாயின. இதனால், நஷ்டம் அடைந்த விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 ஊக்கத் தொகை வழங்கக் கோரி போராடி வருகின்றனர்.

நபநிர்மாண் குருஷேக் சங்கதன் (என்கேஎஸ்) அமைப்பினர் இது தொடர்பாக சட்டப்பேரவை நடவடிக்கைகளின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து கோஷங்களை எழுப்பிப் போராடினர்.

மறியல்

இந்நிலையில், தலைமைச் செயலகத்தின் பிரதான வாயில் முன் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது, பிரதான வாயில் வழியாக நுழைய முயன்ற முதல்வர் நவீன் பட்நாயக்கின் காரை வழிமறித்துக் கோஷமிட்டனர். இதனால் 5 நிமிடங்கள் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதான வாயில் வழியாக தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முடியாததால், நவீன் பட்நாயக் பின்வாசல் வழியாக அலுவலகம் சென்றார்.

இதையடுத்து போராட்டக்காரர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“இந்த அரசாங்கம் செவிட்டு அரசாங்கமாக இருக்கிறது. பைலின் புயலால் பயிர்கள் நாசமாகி விட்டன. ஆகவே, குவிண்டால் நெல்லுக்கு ரூ. 500 கூடுதலாகக் கேட்டுப் போராடி வருகிறோம். கடந்த 15 நாள்களாக எங்கள் உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் ஜனநாயக ரீதியில் போராடுகிறோம்” என என்கேஎஸ் தலைவர் அக்ஷயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பயங்கரவாதச் செயல்

இப்போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கல்பதரு தாஸ், “முதல்வரின் கார் முற்றுகை என்பது பயங்கரவாத நடவடிக்கை. அப்போராட்டக்குழுவினர் விவசாயிகளின் பிரதிநிதிகள் அல்ல. ஊடகங்களின் கவனத்தைக் கவர்வதற்காக இதுபோன்று நாடகம் நடத்துகின்றனர். உண்மையான விவசாய அமைப்புகளுடன் பேசி வருகிறோம்” என்றார். முன்னதாக, முதல்வர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபடத் திட்ட மிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாயின. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தின் முன் தங்கள் போராட்டத்தை மாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.

“முதல்வர் செல்லும் வழியில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது துரதிருஷ்டவசமானது” என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

‘அடுத்த 24 மணி நேரத்துக்குள் அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 ஓய்வூதியம், குவிண்டால் நெல்லுக்கு ரூ.500 கூடுதல் தொகை வழங்காவிட்டால், ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என, நபநிர்மாண் குருஷேக் சங்கதன் அமைப்பு கடந்த திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x