Last Updated : 27 Nov, 2015 12:22 PM

 

Published : 27 Nov 2015 12:22 PM
Last Updated : 27 Nov 2015 12:22 PM

ஜிஎஸ்டி முட்டுக்கட்டை நீக்க முயற்சி: சோனியா, மன்மோகன் சிங்குக்கு மோடி தேநீர் விருந்து அழைப்பு

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை) சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தியை தான் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு காங்கிரஸின் முட்டுக்கட்டையே பெரும் காரணம்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி. மசோதவை நிறைவேற்ற வேண்டுமென்பதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. இதற்காக, காங்கிரஸ் கட்சியினரை சமாதானப் படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, "ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதற்காக அனைவரிடமும் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்" என்றார்.

அதன் அடிப்படையில், பிரதமர் மோடி தான் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாலை 7 மணிக்கு பிரதமர் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த விருந்து நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா தொடர்பான எங்களது கோரிக்கையைப் பரிசீலித்தால் அதுகுறித்த விவாதத்துக்கு தயார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

அதுகுறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கூறும்போது, "நியாயமானதாக இருந்தால் ஒவ்வொரு மசோதாவையும் ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு சட்டமும் முக்கியமானதுதான்.

ஜிஎஸ்டி மசோதா முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தயாரிக்கப்பட்டது. இந்த மசோதா தொழில் துறை, வர்த்தகத் துறை மற்றும் வாடிக்கையாளர் ஆகிய அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதை பரிசீலிக்க தயாராக இருந்தால் இதுதொடர்பான விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x