Last Updated : 25 Nov, 2014 06:16 PM

 

Published : 25 Nov 2014 06:16 PM
Last Updated : 25 Nov 2014 06:16 PM

முதல்கட்ட வாக்குப்பதிவு: காஷ்மீரில் 70%, ஜார்க்கண்டில் 62%: தீவிரவாத அச்சுறுத்தலைப் புறக்கணித்தனர் மக்கள்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தீவிரவாதிகள், நக்ஸலைட்களின் அச்சுறுத்தலை மீறி பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஜம்மு-காஷ்மீரில் 70 சதவீத வாக்குகளும், ஜார்க்கண்டில் 61.92 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்கள் 5 கட்டங் களாக நடைபெறுகின்றன. நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் 15 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. தேர்தல் புறக்கணிப்புக்கு பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்த போதும், மக்கள் அதனைப் புறம்தள்ளி வாக்குப்பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இங்கு சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த 15 தொகுதிகளில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 61 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

“வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்றது. எவ்வித குறைபாடுகளும் இன்றி 100 சதவீதம் முழுமையான வாக்குப்பதிவு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன” என துணை தேர்தல் ஆணையர் வினோத் தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில், 2 தொகுதிகளில் 68 சதவீதமும், பந்திப்புரா மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 70.30 சதவீத வாக்கு களும் பதிவாகின. இது முந்தைய தேர்தலை விட 11 சதவீதம் அதிகம்.

தோடா மாவட்டத்தில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. கிஸ்த்வார், ரம்பன் மாவட்டங்களில் தலா 70 சதவீத வாக்குகள் பதிவாகின. லே மாவட்டத்தில் 57 சதவீதம் பதிவானது. கார்கிலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த முறை பதிவானதை விட சுமார் 14 சதவீதம் குறைவு ஆகும்.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 13 தொகுதிகளுமே நக்ஸல் ஆதிக்கம் மிகுந்தவையாகும். இங்கு தேர்தலின்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளின் முக்கியத் தலை வர்கள் மீது தாக்குதல் நடத்த நக்ஸல்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தி ருந்தது.

மேலும் வாக்குப்பதிவு மையங்கள் மீதும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. நக்ஸல் அச்சுறுத்தலையும் மீறி, 61.92 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக பவந்த்பூரில் 69.6 சதவீதமும், குறைந்தபட்சமாக சத்ராவில் 53.85 சதவீத வாக்குகளும் பதிவாகின.

கண்ணிவெடி

ஜார்க்கண்ட் ஹுசைனாபாத் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஹரிஹர்கஞ்ச் பகுதியில் சாலையில் கண்ணி வெடி புதைக்கப்பட்டிருந்தது. அதனை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்தனர். ஜார்க்கண்டிலும் அமைதி யாகவே தேர்தல் நடைபெற்றது.

பிஹாரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் கடந்த 2000-ல் பிரிந்தது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெறும் மூன்றாவது தேர்தல் இதுவாகும்.

கணிப்பு வெளியிட தடை

தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளை எந்த வடிவத்திலும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x