Published : 30 Aug 2016 09:38 AM
Last Updated : 30 Aug 2016 09:38 AM

‘பங்லா’வாகிறது மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற பேரவையில் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை, ‘பங்லா’ என்று மாற்றுவதற்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

மேற்குவங்க மாநில சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, ‘‘மாநிலத்தின் பெயரை மாற்று வதற்கு முன்பு மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசு முயற்சி செய்தது. ஆனால், முடியவில்லை. இப்போது மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதை வரலாறு மன்னிக்காது. மாநிலத்தின் பெயரை மாற்றி தீர்மானம் இயற்றப்பட்ட இந்த நாள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

பின்னர், மேற்குவங்க மாநிலத் தின் பெயரை ‘பங்லா’ என்று மாற்று வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

அதன்படி, இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், மேற்குவங்க மாநிலத்தின் பெயர், ஆங்கிலத்தில், ‘பெங்கால்’ என்றும் இந்தியில் ‘பங்கல்’ என்றும், வங்கமொழியில் ‘பங்கல்’ என்றும் அழைக்கப்படும்.

ஆங்கில அகரவரிசையில், ‘WEST BENGAL’ என்பதில் ‘W’ கடைசியில் வருகிறது. இப்போது, ‘BENGAL’ என்று மாற்றினால், ‘B’ 2-வது எழுத்தாக வருகிறது. அதன்மூலம் மாநிலத்தின் வரிசை முதலில் வந்துவிடும். இதுவும் பெயர் மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மம்தா கூறும் போது, ‘‘மாநிலங்களுக்கு இடை யிலான கூட்டங்களின் போது மேற்குவங்க மாநிலத்தின் சார்பில் பேசுவதற்கு கடைசியாக (31-வது மாநிலமாக) வாய்ப்பு கிடைக் கிறது. மாநிலத்தின் பெயர் மாற்றப் பட்டால் முதலிலேயே பேச அழைக்கப்படுவோம்’’ என்றார்.

மேற்குவங்க மாநிலம் பெங்காலி யில் தற்போது, ‘பஸ்சிம் பங்கா’ என்றழைக்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசில் முதல்வர் புத்ததேவ் பட்டாச் சார்யா, மாநிலத்தின் பெயரை, ‘பஸ்சிம் பங்கா’ என்று மாற்றப் படும் என்று அறிவித்தார். ஆனால், அந்த பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த 1947-ம் ஆண்டு நாடு பிரிவினையின்போது பெங்கால் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் இந்தியாவுக்குள் இருக்கும் பகுதி மேற்குவங்கம் என்றும், கிழக்கு வங்கம்தான் வங்கதேசமானது.

இதுகுறித்து பிரபல எழுத்தாளர் மறைந்த சுனில் கங்கோபாத்யாய் கூறும்போது, ‘‘கிழக்கு வங்கம் என்ற ஒன்று இல்லாத போது, மேற்குவங்கம் மட்டும் எப்படி இருக்க முடியும்’’ என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x