Published : 03 Jun 2017 02:00 PM
Last Updated : 03 Jun 2017 02:00 PM

பிஹாரில் முதலிடம் பிடித்த மாணவர் மோசடி செய்ததாக கைது

பிஹாரில் பிளஸ் 2 தேர்வில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் 82.6% பெற்று முதலிடம் பிடித்த மாணவர் கணேஷ் குமார், மோசடி செய்ததாகக் கூறி வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பிஹார் பள்ளித் தேர்வு வாரியத் தலைவர் ஆனந்த் கிஷோர், ''கணேஷ் குமாரின் தேர்வு முடிவுகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அவருக்கு எதிராகவும், பள்ளி அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

என்ன நடந்தது?

இசைத் துறையில் 83% மதிப்பெண்கள் பெற்ற கணேஷ் குமாரால் செய்தியாளர் சந்திப்பின்போது அடிப்படை இசை நோட்ஸ்கள் குறித்து பதிலளிக்கமுடியவில்லை. இந்தியில் 93% மதிப்பெண் பெற்றவரால், அது தொடர்பான கேள்விகளுக்கும் பதில் கூற முடியவில்லை.

முன்னதாக வெள்ளி மாலை தேர்வு வாரியத்துக்குச் சென்று கிஷோரை சந்தித்த கணேஷ், சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளித் தேர்வுக்குத் தனது பிறந்தநாள் சான்றிதழைப் போலியாகச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

பாட்னா எஸ்எஸ்பி மனு மஹராஜ் கூறும்போது, ''கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்'' என்றார்.

'ஏன் கைது என்று புரியவில்லை'

ஆனால் இதுகுறித்து கணேஷ் பேசும்போது, ''சில தகவல்களை விசாரிக்க என்னை அழைத்தனர். என்னை ஏன் கைது செய்துள்ளனர் என்று புரியவில்லை'' என்றார்.

கணேஷ் ஒரு தலித் என்பதாலேயே அவர் குறிவைக்கப்படுகிறார் என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x