Last Updated : 26 Jun, 2016 12:24 PM

 

Published : 26 Jun 2016 12:24 PM
Last Updated : 26 Jun 2016 12:24 PM

எம்எல்ஏவைக் காணவில்லை என புகார் பதிவு: கேரள இளைஞர் காங்கிரஸால் சர்ச்சையில் சிக்கிய போலீஸ்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவைக் காணவில்லை என, இளைஞர் காங்கிரஸார் அளித்த நையாண்டிப் புகாரை, ஆராயாமல் பதிவு செய்த கொல்லம் மேற்கு போலீஸார் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

மலையாள நடிகரான முகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொல்லம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தொகுதிக்கு வந்து மக்களை சந்திக்கவில்லை என, காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதை நையாண்டியாக வெளிப்படுத்தும் வகையில், ‘கொல்லம் தொகுதியில் எம்எல்ஏ முகேஷை காணவில்லை. அவரை உடனடியாக கண்டுபிடித்துத் தரவேண்டும்’ என, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த சிலர், கொல்லம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் நிலையத்தில் அப்புகாரைப் பெற்ற அதிகாரியும், உள்ளடக்கத்தை முழுமையாக ஆராயாமல் புகாரை பதிவு செய்து, அதற்கான ரசீதும் வழங்கி விட்டார். இதுகுறித்து தகவல் வெளியானதும், மார்க்சிஸ்ட் கட்சி யினர் போலீஸ் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

‘பணியில் இருந்த அதிகாரி, கவனக்குறைவால் தவறுதலாக புகாரை பெற்றுவிட்டார். புகார் அளித்தவர்கள் எப்படியோ பேசி ரசீதை வாங்கிவிட்டனர். எனினும் தவறு எங்களுடையது தான்’ என, கொல்லம் மேற்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜி.பினு ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் குறித்து முகேஷிடம் கேட்டபோது, “நான் எப்போதும் தொகுதியில்தான் இருக்கிறேன். தொகுதி பக்கம் நான் வரவில்லை எனக் கூறுவது நகைச் சுவையாக இருக்கிறது” என்றார்.

இதை மறுக்கும் காங்கிரஸார், “தொகுதியில் நடைபெறும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் முகேஷ் கலந்துகொள்வதில்லை. அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மற்றும் நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தபோதும் அவர் வந்து பார்க்கவில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x