Last Updated : 08 Aug, 2016 04:34 PM

 

Published : 08 Aug 2016 04:34 PM
Last Updated : 08 Aug 2016 04:34 PM

மோடியின் மவுனமும் பெல்லட் துப்பாக்கிகளும்: காஷ்மீர் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் தாக்கு

கடந்த 31 நாட்களாக முடங்கியுள்ள காஷ்மீர் மாநிலத்தை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் மவுனியாக வேடிக்கை பார்ப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.

இதே விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகக் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளன.

மாநிலங்களவையில் இன்று பேசிய குலாம் நபி ஆசாத், "காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 31 நாள் ஆகிறது. என் நினைவுக்கு எட்டிய வரையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரில் தொடர்ச்சியாக 31 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததில்லை. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை.

இந்தியாவின் மகுடம் என அழைக்கப்படும் காஷ்மீர் பற்றி எறிகிறது. ஆனால் அந்த நெருப்பின் தாக்கம் டெல்லியை அடையவில்லை. வெப்பத்தை உணராத நிலையில் டெல்லி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் மவுனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே நிலவுகிறது.

காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் என்னதான் சொல்வார் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் மக்கள். இது ஒரு அசாதரண சூழல். இந்த நிலையில் அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி பிரதிநிகள் காஷ்மீருக்கு சென்று கள நிலவரம் அறிய வேண்டும்" என்றார்.

சீதாராம் யெச்சூரி:

குலாம் நபியைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, "30 நாட்களுக்கு மேலாக காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு அரசால் எப்படி மவுனம் காக்க முடியும். நாம் ஏன் பெல்லட் துப்பாக்கிகளை உபயோகிக்க வேண்டும்.

இது மனிதத்தன்மையற்றது. இது கிரிமினல் குற்றத்துக்குச் சமமானது. இஸ்ரேல்கூட பாலஸ்தீன் நாட்டவர்க்கு எதிராக பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திவிட்டது. எத்தனை முறைதான் இப்பிரச்சினையில் அரசை சாடுவது? ஆனாலும் அரசு திட்டமிட்டே காஷ்மீர் பிரச்சினையில் மவுனம் காக்கிறது" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜாவும் பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சியின் நீரஜ் சேகர் பேசும்போது, "காஷ்மீரில் கொல்லப்படும் இளைஞர்கள் இந்தியர்கள் இல்லையா? பிரதமரோ உள்துறை அமைச்சரோ இதுவரை ஏதும் சொல்லவில்லை. இந்த மவுனத்தின் மூலம் இந்த அரசாங்கம் நாட்டுக்கு எத்தகைய செய்தியை சொல்ல முற்படுகிறது" என்றார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், "அரசின் மவுனம் வேதனையளிக்கிறது" என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு பதில்:

காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் மவுனத்தை பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், "காஷ்மீர் பிரச்சினை மீதான விவாதத்துக்கு அரசு தயாராக இருக்கிறது. காஷ்மீரில் அமைதி நிலவவே விரும்புகிறோம். காஷ்மீர் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சக்திகளை காஷ்மீர் மக்கள் தொடர்ந்து தோற்கடித்துள்ளனர். எனவே காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதத்துக்கு தயாராக இருக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x