Last Updated : 26 Aug, 2016 08:16 AM

 

Published : 26 Aug 2016 08:16 AM
Last Updated : 26 Aug 2016 08:16 AM

மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரிக்கை: கர்நாடக முதல்வருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு

அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து பரிசீலிப்பதாக சித்தராமையா பதில்

மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் உடனடியாக நீரைத் திறந்துவிடும்படி தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேற்று சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். கர்நாடக அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து பரிசீலிப்பதாக சித்தராமையா பதிலளித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவில் பருவ‌ மழை பொய்த்ததால், காவிரியின் குறுக்கே உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. எனவே தமிழகத்துக்கு தற்போது காவிரி நீரை திறந்துவிட முடியாத‌ நிலையில் இருப்பதாக கர்நாடகா தெரிவித்து வருகிற‌து.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, இயற்கை நீர்வழி பாதை பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான‌ ராமலிங்கம், தமிழக விவசாய சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி உட்பட பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று காலை கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தங்களை வரவேற்ற சித்தராமையாவிடம், மனிதாபிமான அடிப்படையில் காவிரி நீரை உடனடியாக திறந்து விடுமாறு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.

‘‘காவிரியில் போதிய நீர் திறந்துவிடாததால் தமிழகத்தில் சம்பா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் விளைந்த வயல்களில் தற்போது ஒரு போகம் விளைவிக்கவே கடினமாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழக விவசாயிகள் உணவுக்கே அல்லாட வேண்டிய அவலம் ஏற்படும்.

எனவே தற்போது ஆரம்ப கட்ட விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், தட்டுப்பாடு இல்லாமல் சம்பா சாகுபடியை முடிக்கவும் உடனடியாக காவிரி நீரை திறந்துவிட வேண்டும். எங்களது கோரிக்கையை அரசியல் பிரச்சினைகளை கடந்து மனிதாபிமான அடிப்படையில் அணுகி, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

பரிசீலிப்பதாக பதில்

அதற்கு சித்தராமையா, ‘‘நடப்பு ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த் ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி உள்ளிட்ட‌ அணை களில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. இதனால் கர்நாடக விவசாயி களுக்கே பாசனத்துக்கு நீர் திறந்து விட முடியவில்லை. பெங்களூரு, மைசூரு, சிக்கப்பள்ளாபூர் உள் ளிட்ட நகரங்களில் குடிநீருக்கு 40 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. இதே அளவு நீர்மட்டம் நீடித்தால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

எனவே தமிழக விவசாயிகள் கர்நாடகாவில் நிலவும் வறட்சியை புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து, தமிழகத்துக்கு நீர் திறப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். அதே வேளையில் கர்நாடகாவில் மழை பெய்தால் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கிறேன்’’ என பதிலளித்தார்.

இதையடுத்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் மற்றும் கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் ஆகியோரிடமும் தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மனு அளித்தனர். கர்நாடகாவில் உள்ள அணைகளில் தற்போது இருக்கும் நீரை இரு மாநிலங் களும் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

சித்தராமையாவுக்கு பாராட்டு

சித்தராமையாவை சந்தித்து விட்டு வெளியே வந்த தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ‘‘பல்வேறு அரசியல் பிரச்சினைகளை தாண்டி கர்நாடக முதல்வர் சித்தராமையா எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார்.

தமிழக விவசாயிகளின் வேதனையை பொறுமையாக கேட்டறிந்தார். டெல்லிக்கு செல்லும் அவசரத்திலும் தமிழக விவசாயி களின் தேவையைக் காது கொடுத்து கேட்டு, அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.

சித்தராமையாவின் அணுகு முறையை பார்க்கும்போது தமிழகத்துக்கு நீர் தருவார் என நம்புகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும். ஜெயலலிதா எங்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண் டும்”என்றனர்.

நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:

காவிரியில் உடனடியாக நீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதேபோல மத்திய அரசுக்கும் தமிழக அரசு அழுத்தம் கொடுத்துவருகிறது. காவிரியில் மழை பெய்யாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க முடியாத நிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம். கர்நாடக அரசின் இக்கட்டான நிலையை மத்திய அரசுக்கும் எடுத்துரைப்போம். மேலும் மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு முறையான அனுமதி பெற முயற்சி எடுக்க‌ப்படும்.

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக‌ வருகிற சனிக்கிழமை (நாளை) முதல்வர் சித்தரா மையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இதில் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள் கின்றனர். இந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளின் நீர்மட்டம், கர்நாடக விவசாயிகளின் நிலை, த‌மிழகத்துக்கு நீர் திறப்பது, தமிழக விவசாயிகளின் கோரிக்கை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், மேகேதாட்டுவில் அணை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படும். காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x