Last Updated : 04 Feb, 2017 10:00 AM

 

Published : 04 Feb 2017 10:00 AM
Last Updated : 04 Feb 2017 10:00 AM

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததா?

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கு, ஐந்து மாநில தேர்தல் காரணமாக, மத்திய அரசு மறுத்ததாகத் தெரியவந்துள்ளது. ஜல்லிக்கட்டை புதிய விளையாட்டாக அறிமுகப்படுத்தவும் தமிழக அரசுக்கு யோசனை கூறப்பட்டதாக தெரிகிறது.

உச்ச நீதிமன்ற தடை காரணமாக தமிழகத்தில் இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருந்தது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த ஜனவரி 17-ம் தேதி மாபெரும் அறப்போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ‘மிருகவதை தடுப்பு சட்டம் 1960’-ல் திருத்தம் செய்து மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு சட்டம் இயற்றியது. எனினும் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களால் ஜல்லிக்கட்டு ரத்தாகும் ஆபத்து மீண்டும் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதை தவிர்க்க, காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை மத்திய அரசு நீக்கியிருந்தால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கு, ஐந்து மாநில தேர்தல் காரணமாக பாஜக அதை செய்ய மறுத்ததாக தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிமுக எம்.பி.க்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பசுவை பாஜகவினர் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் காளையை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கினால் அக்கட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும். இது தற்போது நடைபெறும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என அஞ்சி, பாஜக அதற்கு மறுத்து விட்டது. மேலும் ஜல்லிக்கட்டை புதிய விளையாட்டாக அறி முகப்படுத்தும்படியும் யோசனை கூறியது. காளையை, விளையாட்டு உட்பட எந்த வகையில் பயன்படுத்தினாலும் பிரச்சினை தான் என்பதால் எங்கள் அரசு மறுத்து விட்டது” என்று தெரிவித்தனர்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2011, ஜூலை 11-ம் தேதி, அப்போதைய சுற்றுசூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷால், காளைகள் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதற்காக தற்போதைய பாஜக எம்.பி.யான நடிகை ஹேமமாலினி ஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத்தொடர்ந்து காளைகள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. இந்த காரணத்தை குறிப்பிட்டு பீட்டா, அதே ஆண்டு டிசம்பரில் ஹேமமாலினிக்கு சிறந்த விலங்குகள் காப்பாளர் விருதை அளித்தது.

இன்றுமுதல் மார்ச் 8- ம் தேதிவரை உ.பி., பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் ஆட்சியை பிடிக்க உ.பி. முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு பாஜக எப்பாடுபட்டாவது ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x