Published : 26 Dec 2013 02:36 PM
Last Updated : 26 Dec 2013 02:36 PM

இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம்: விசாரணை கமிஷன் அமைப்பு

குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் பொறியாளர் பெங்களூரில் தங்கி பணியாற்றி வந்தார். அந்தப் பெண்ணை குஜராத் மேலிட உத்தரவின்பேரில் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார் 2009-ம் ஆண்டில் வேவு பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதளங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன. அதற்கு ஆதாரமாக குஜராத் உள்துறை முன்னாள் இணை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் சிங்கால் ஆகியோர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களை கோப்ராபோஸ்ட் வெளியிட்டது. சம்பந்தப்பட்ட பெண் பொறியாளருடன் முதல்வர் மோடி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அந்த இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநிலம் தாண்டி ஒட்டுக்கேட்பு

குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், டெல்லி, இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் பொறியாளர் தங்கியிருந்தபோது குஜராத் போலீஸார் அந்தப் பெண்ணை வேவு பார்த்ததாகவும் அவரது தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக ஒட்டுக் கேட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் ஒருவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அந்த விதியை மீறி இளம்பெண்ணின் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பதால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொடர்புடையதாகக் கூறப்படும் இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அந்த கமிஷன் 3 மாதங்களில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிஷனும் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x