Published : 01 Feb 2017 05:15 PM
Last Updated : 01 Feb 2017 05:15 PM

புதிய ரூ.2000: கள்ள நோட்டுகளுக்கும் அசல் நோட்டுகளுக்கும் 50% ஒற்றுமை

புதிதாக அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளுக்கும் அசல் நோட்டுகளுக்கும் 50 சதவீத ஒற்றுமை உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இத்தகவல் வங்க தேச எல்லையில் பிடிக்கப்பட்ட போலி இந்திய ரூபாய் நோட்டுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை, மால்டா மாவட்டத்தில் இருந்து டிசம்பர் 2016 முதல் ஜனவரி 2017 வரை, நான்கு சம்பவங்களில் புதிய 2000 ரூபாய் கள்ளநோட்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி, ''கள்ள நோட்டுகள், அசல் நோட்டுகளின் வடிவத்தையும், அதே வண்ண கலவையையும் கொண்டிருந்தன. அத்தோடு வாட்டர்மார்க், பிரத்யேக எண் முறைகளையும் கொண்டிருந்தன.

மற்ற இடங்களில் ஸ்கேன் எடுத்தும், வண்ணப்பிரதியெடுத்தும் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகள், இங்கு அதிநவீன சாயங்கள் கொண்டு அச்சடிக்கப்பட்டிருந்தன'' என்றார்.

ஆர்பிஐ பட்டியலிட்டிருந்த 17 பாதுகாப்பு அம்சங்களில் பாதிக்கும் மேற்பட்ட அம்சங்கள் கள்ள நோட்டுகளில் நகலெடுக்கப்பட்டிருந்தன. நல்ல நோட்டில், முகப்பில் 13 அம்சங்களும், பார்வையற்றோருக்கு 2 அம்சங்களும், பின்புறத்தில் 4 அம்சங்களும் இருக்கும்.

சின்னம் மற்றும் வாட்டர் மார்க்

கள்ள நோட்டில், அசல் நோட்டின் பின்புறம் இருந்த 4 பாதுகாப்பு அம்சங்களும் நகலெடுக்கப்பட்டுள்ளன. சந்திரயான், மொழிகள் வரிசை, ஸ்வச் பாரத் சின்னம், நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவை அச்சு அசலாக இருந்தது. அதேபோல முகப்பில் தேவநாகரி எழுத்துகள், ஆர்பிஐ ஆளுநர் கையெழுத்து மற்றும் வாட்டர் மார்க் ஆகியவையும் அச்செடுக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் கள்ள நோட்டுகளின் காகிதத்தின் தரம், அசல் நோட்டுகளோடு பொருந்தவில்லை. அச்சடிக்கப்பட்டிருந்த சாயத்தின் அடர்த்தி அதிகமாக இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதேபோல பார்வையற்றோருக்கான பாதுகாப்பு அம்சமும் பயன்படுத்தப்படும் நிலையில் இருக்கவில்லை.

புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு 3 மாதங்களில் கள்ள நோட்டுகள் 50 சதவீதத்துக்கும் மேலான பாதுகாப்பு அம்சங்களோடு பழக்கத்துக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பிஎஸ்எஃப் மற்றும் என்ஐஏ அதிகாரிகள், மால்டா மாவட்டத்தில் மொகமது அஷ்ராஃபுல் மற்றும் ரிபன் ஷேக் என்ற இருவரை கள்ள நோட்டுகளோடு கைது செய்துள்ளனர்.

சில 500 ரூபாய் கள்ள நோட்டுகள், அசல் நோட்டுகளின் காகிதம் மற்றும் வண்ணக்கலவைக்கு ஈடாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x