Published : 13 Jun 2016 07:48 AM
Last Updated : 13 Jun 2016 07:48 AM

வாகன ஓட்டிகளுக்கு மே மாதத்தில்தான் கண்டமே: சாலை விபத்தில் ஒரே மாதத்தில் 14,000 பேர் பலியான சோகம்

நாடு முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக மே மாதங்களில் தான் அதிக அளவில் சாலை விபத்து கள் நடந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 14,000 பேர் மே மாதத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக கூறப்படு கிறது.

இந்திய சாலை விபத்துகள் குறித்த ஆண்டு அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய சாலைகளில் கடந்த ஆண்டு மே மாதம் 46,247 விபத்துகள் நேரிட்டுள்ளன. அதில் 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 47,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆண்டு முழுவதும் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ள நிலையில், மே மாதத்தில் மட்டும் 9 சதவீதம் அளவுக்கு விபத்துகள் பதிவாகியுள்ளன.

மார்ச்சும் மோசம்

மே மாதத்துக்கு அடுத்தபடி யாக இந்தியர்களுக்கு படுமோச மாக அமைந்திருக்கும் மாதம் மார்ச். தொடர்ச்சியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 42,842 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் நடக்கும் விபத்துகளை கணக் கிட்டால் மார்ச் மாத சராசரி 8.5 சதவீதமாக உள்ளது.

இதேபோல் 2014-ல் மே மாதத்தில் மட்டும் 45,504 விபத்துகளும், மார்ச்சில் 42,524 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. ஆண்டு சராசரியில் இது 9.2 மற்றும் 8.6 சதவீதமாக உள்ளது.

மாலை நேரத்தில்..

இதில் மற்றொரு வினோதம் என்னவெனில் அதிகப்படியான விபத்துகள் மாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள்தான் நிகழ்கின்றன. கடந்த ஆண்டு இந்த மூன்று மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 87,819 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்த விபத்தில் இது 17.5 சதவீதமாகும்.

அடுத்தபடியாக மாலை 6 முதல் இரவு 9 மணி வரை 86,836 விபத்துகள் அரங்கேறியுள்ளன. ஒட்டுமொத்த விபத்தில் இதன் சதவீதம் 17.3 ஆகும்.

கிராமங்களில் அதிகம்

நள்ளிரவு தொடங்கி விடியற்காலை வரையிலான தருணங்களில்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கும் என மக்கள் நம்பி வரும் வேளையில், இந்த நேரங்களில் தான் மிக குறைவான விபத்துகள் நடந்துள்ளன. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் கடந்த ஆண்டு 27,954 விபத்துகள் நடந்துள்ளன.

இதேபோல் அதிக மக்கள் தொகை கொண்ட நகர்புறங் களில் தான் அதிகமான விபத்துகள் ஏற்படும் என்ற நம்பிக்கையும் பொய்யாகியுள்ளது. கடந்த ஆண்டு நகர்ப்புறங்களில் 2,31,894 விபத்துகள் நேரிட்டுள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் 2,69,529 விபத்துகள் ஏற்பட் டுள்ளன. அதாவது கிராமப்புறங் களில் 53.8 சதவீதமும், நகர்ப்புறங் களில் 46.2 சதவீதமும் விபத்துகள் நடந்திருப்பதாக பதிவாகியுள்ளது.

பலியாகும் இளம் வயதினர்

கடந்த 2015-ல் மொத்தமாக நடந்த 5 லட்சம் விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு விபத்துகளில் சிக்கியவர்கள் அனைவருமே இருசக்கர வாகன ஓட்டிகள் தான். அதில் 15 முதல் 24 வயதுள்ள இளம்தலைமுறையினர் மட்டும் 33 சதவீதம் பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கார், ஜீப் மற்றும் டாக்சிகளில் செல்வோர் அதிக விபத்துகளில் சிக்கியுள்ளனர். அதிகளவு பாரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்கள் மூலம் 77,116 விபத்துகளும், 25,199 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

1 மணி நேரத்தில்…

ஆண்டு அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 57 விபத்துகள் ஏற்பட்டு, 17 பேர் உயிரிழக்கின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனைப்படுகிறேன். 15 முதல் 34 வயது மதிக்கத்தக்க இளம் தலைமுறையினர் சாலை விபத்துகளில் பலியாவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. போர், நோய், தீவிரவாதம் ஆகியவற்றில் கூட இந்த அளவுக்கு உயிர் பலிகள் ஏற்படுவதில்லை’’ என்றார்.

ஓட்டுநர்களின் கவனக்குறைவு மற்றும் தவறு காரணமாக கடந்த ஆண்டில் 77.1 சதவீத விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் மூலம் 4.2 சதவீத விபத்துகள் ஏற்பட்டு, 6.4 சதவீதம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முதலிடத்தில் மும்பை

மேலும் பெருநகரங்களில் மிக அதிகமான விபத்துகள் மும்பையிலும், அதிகமான பலி எண்ணிக்கை தேசிய தலைநகரான டெல்லியிலும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் மும்பையில் 23,468 விபத்துகளும், டெல்லியில் 1,622 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x