Last Updated : 23 Nov, 2013 12:00 AM

 

Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM

சுரங்க முறைகேடு புகார்: கர்நாடக அமைச்சர் ராஜிநாமா

சுரங்க முறைகேடு புகாரில் சிக்கிய கர்நாடக மாநில செய்தித் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் ராஜிநாமா செய்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் சந்தோஷ் லாட், தனது சுரங்க நிறுவனங்களின் மூலம் கனிம தாதுக்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க., ம.ஜ.த. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தோஷ் லாடை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களாக வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சுரங்க முறைக்கேடு புகார்

"அமைச்சர் சந்தோஷ் லாட் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெல்லாரி மாவட்டத்தில் சுரங்க தொழில் செய்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சுரங்கங்களில் இருந்து லட்சக்கணக்கான டன் கனிம தாதுக்களை வெட்டியெடுத்து சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் பல சுரங்கங்கள் அரசின் அனுமதி பெறாமலே செயல்பட்டு வருகின்றன.

அவர் சட்ட விரோதமாக சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதமே உறுதி செய்துள்ளது. எனவே, சந்தோஷ் லாட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.ஆர்.ஹிரேமட் கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

போர்க்கொடி தூக்கிய எதிர்க்கட்சிகள்

இதனைத் தொடர்ந்து சந்தோஷ் லாடை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி பா.ஜ.க., ம.ஜ.த உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன. முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் பா.ஜ.க.வினர் ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜை நேரில் சந்தித்து 'சந்தோஷ் லாட் மீது நடவடிக்கை எடுக்குமாறு' புகார் மனு அளித்தனர்.

எதிர்க்கட்சிகளின் குரலுக்கு முதல்வர் சித்தராமையா செவிசாய்க்காததால் முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையில் பா.ஜ.க.வினர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆளுநர் வலியுறுத்தல்

சந்தோஷ் லாடுக்கு எதிராக எதிர்கட்சிகளின் தொடர் போராட்டத்தால் கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்திலேயே அவருக்கு எதிரான குரல் கிளம்பியது. மேலும் ஆளுநர் பரத்வாஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். சமீபத்தில் வெளியான அக்கடித்தத்தில், 'சுரங்க முறைகேடு புகாரில் சிக்கியுள்ள சந்தோஷ் லாட் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி என்ன முடிவெடுத்து இருக்கிறீர்கள்?'' என கேள்வி எழுப்பியிருந்தார்.

அனைத்து தரப்பில் இருந்தும் சந்தோஷ் லாடுக்கு எதிராக அழுத்தமான குரல் மேலெழுந்து வந்த வேளையில், ஆளுநரின் கடிதம் கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை சித்தராமையாவிடம் செய்திகள் கேள்வி எழுப்பியபோது, ''அமைச்சர் சந்தோஷ் லாட் மீதான சுரங்க முறைகேடு குறித்த ஆளுநரின் கடிதம் தொடர்பாக விசாரனை செய்துவருகிறேன். ஓரிரு நாட்களில் அவருக்கு நல்ல பதிலை சொல்ல இருக்கிறேன். அதுவரை காத்திருங்கள்'' என்றார்.

இந்நிலையில் அமைச்சர் விவகாரம் ஒட்டுமொத்த காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க சித்தராமையா முடிவெடுத்திருப்பதாக கர்நாடக தலைமைச் செயலக வட்டாரத்தில் செய்திகள் வெளியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x