Published : 21 Nov 2013 05:39 PM
Last Updated : 21 Nov 2013 05:39 PM

2ஜி ஜெபிசி அறிக்கையை திருப்பி அனுப்புக: மீரா குமாருக்கு டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான ஜேபிசி (நாடாளுமன்றக் கூட்டுக் குழு) அறிக்கை முழுமையற்றது என்றும், அதைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மீரா குமாருக்கு அவர் எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில், 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான ஜேபிசி அறிக்கை அரசியல் சார்புடையதாக உள்ளது என்றும், அக்குழுவின் தலைவர் (சாக்கோ) ஒருசார்பாக செயல்பட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு நெறிகளின்படி முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், ஒருவேளை முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1998 முதல் 2009 வரை அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவை தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் குறைகூறியுள்ளார்.

மேலும், '2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான ஆ. ராசாவின் விளக்கம் இறுதிகட்ட அறிக்கையில் சேர்க்கப்படும் என்று ஜேபிசி தலைவர் உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த அறிக்கையை முறையாக பரிசீலிக்காமல் அவர் நிராகரித்துவிட்டார். எந்தவொரு காலக்கட்டத்திலும் ராசாவின் விளக்கம் விவாதிக்கப்படவே இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நான் தாக்கல் செய்த ஆட்சேப அறிக்கையில் இருந்தும் ஆ.ராசாவின் விளக்கம் குறித்த பகுதி நீக்கப்பட்டுள்ளது. இது எனக்கும் ஆ.ராசாவுக்கும் இழைக்கப்பட்ட அநீதி. என்னுடைய ஆட்சேப அறிக்கையை நீர்த்துப் போக செய்யும் வகையில் தவறான பிரிவின் கீழ் அது சேர்க்கப்பட்டுள்ளது. சில உண்மைகளை ஜேபிசி குழு முழுமையாக நிரந்தரமாக மூடிமறைத்துவிட்டது.

எனவே, ஜே.பி.சி. அறிக்கையை அந்தக் குழுவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். 2ஜி குறித்து முழுமையாக விசாரணை நடத்தி மறுஅறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜே.பி.சி. அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் எழுத்துப்பூர்வ விளக்கமும் சேர்க்கப்பட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் டி.ஆர். பாலு கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x